பிரிட்டனில் படிப்பை முடித்த வெளிநாட்டு மாணவர்களுக்கான 2 ஆண்டு விசா திட்டம் மீண்டும் அமல்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 20:05

லண்டன்,

   பிரிட்டன் பல்கலைகழகங்களில் படிப்பை முடித்த வெளிநாட்டு மாணவர்கள் மேலும் 2 ஆண்டுகள் தங்கி வேலை செய்ய வகை செய்யும் விசா திட்டத்தை பிரிட்டன் அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கை இந்திய மாணவர்களுக்கு சாதகமாக அமையும்.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்த படிப்புக்கு பிந்தைய விசா திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிநாட்டு மாணவர்களுக்கான 2 ஆண்டு விசா திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தீவிர கோரிக்கைக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த 2 ஆண்டு விசா 2020-21 ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் திறமைக்கு தகுந்தவாறு பணி விசாவிற்கு மாற முடியும்.

கடந்த 2012-ஆம் ஆண்டு போலில்லாமல் இந்த விசா திட்டத்தின் கீழ் உண்மையான, நம்பகமான மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவதை உறுதி செய்வதற்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதை பற்றிய விவரங்கள் வரும் மாதங்களில் தெரிவிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த நடவடிக்கையால் இந்திய மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பிரிட்டனில் பணியாற்ற வழி ஏற்படும். இதன் மூலம் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளை சேர்ந்த திறன்மிக்க மாணவர்களுக்கு பணி அனுபவம் கிடைக்க இந்த திட்டம் உதவும்.

மேலும் உலகின் திறமையான மாணவர்களை பிரிட்டன் பல்கலைகழகங்களை நோக்கி ஈர்க்கவும் இந்த திட்டம் உதவும் என்று பிரிட்டன் உள்துறை அமைச்சர் பீரிதி படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து இந்தியாவின் இங்கிலாந்து தூதர் சர் டொமினிக் அஸ்கியூத் செய்தியாளர்களிடம் பேசுகையில் ‘‘இந்திய மாணவர்களுக்கு இது ஒரு அருமையான செய்தி. அவர்கள் இப்போது பட்டப்படிப்பை முடித்த பின்னர் பிரிட்டனில் வேலை பார்த்து தங்கள் திறன்களையும் அனுபவத்தையும் பெற முடியும் என சர் டொமினிக் அஸ்கியூத் கூறினார்.