புதுடில்லி,
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணிடம் இன்று மூடப்பட்ட அறையில் நடந்த விசாரணையின் போது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
![]() | ![]() |
முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது இரு உறவினர்கள் உயிரிழந்தனர். உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உன்னாவ் பெண்ணுக்கு ஏற்பட்ட விபத்து உண்மையில் கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து இந்த வழக்கு உட்பட உன்னாவ் பெண் தொடர்பான 5 வழக்குகளை உச்சநீதிமன்றம் சிபிஐ இடம் ஒப்படைத்தது.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை டில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி தர்மேஷ் சர்மா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினார்.
உன்னாவ் பெண் நீதிமன்றத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து சிறப்பு நீதிபதி இந்த கடிதத்தை அனுப்பினார்.
இந்த கோரிக்கை தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உன்னாவ் பெண்ணிடம் மூடப்பட்ட அறையில் வாக்குமூலம் பெற டில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணி இன்று துவங்கியது.
இதற்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டிராமா மையத்தில் உள்ள ஒரு அறை தற்காலிக நீதிமன்றமாக மாற்றப்பட்டது. அங்கு உன்னாவ் பெண்ணின் வாக்குமூலத்தை மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா பதிவு செய்தார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முன்னாள் பாஜக தலைவர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் சாஷி சிங் ஆகியோரும் இன்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.