முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன்: அமைச்சர் ஜெயகுமார்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 18:04

சென்னை,

   தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்துள்ளார். இன்னும் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வர இருக்கிறது.

இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திறந்த மனதோடு பாராட்ட வேண்டும். ஸ்டாலின் தான் கூறியப்படி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன்.

அதிமுக ஆட்சியில் அதிகளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ள நிலையில், ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியின் போது கூவத்தை சுத்தப்படுத்த ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? அதனால் கூவம் சுத்தமாகி விட்டதா? ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை அளிக்க முடியுமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.