போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் : நிதின் கட்கரி தகவல்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 17:46

புதுடில்லி,

   திருத்தப்பட்ட மோட்டார் வாகன தடை சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது விதிக்கப்படும் அபராத தொகையை குறைப்பது பற்றி மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம்,  அமலுக்கு வந்தது. இதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சாலை விதிமீறலில் ஈடுபடுவோரை கண்டறிய நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொண்டுவரப்பட்டாலும், அதிகரிக்கும் சாலை விதிமீறல்களால் அபராத தொகையை வசூலிக்க முடியாமல் போக்குவரத்துத் துறை காவலர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது விதிக்கப்படும் கடுமையான அபராதம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை. விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது. அபராதம் வசூலிப்பது விபத்துகளில் இருந்து உயிர்களை காக்கத்தானே தவிர, அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அல்ல.

போக்குவரத்து விதிமீறலுக்கான கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை குறைத்து குஜராத் அரசு அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் போராட்டம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் டில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். பழைய ஸ்கூட்டர் ஒன்றை தூக்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

அபராதம் வசூலிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்காமல், பழுதடைந்த சிக்னல்கள், மோசமான சாலைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யாமல் பொதுமக்களிடம் அதிகளவில் அபராத தொகை வசூலிப்பது நியாயமல்ல என்று காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டினர்.