வீராணம் ஏரி மற்றும் கீழணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: அமைச்சர் சம்பத் திறந்தார்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 17:41

கடலூர்,

  கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மற்றும் கீழணையிலிருந்து பாசனத்திற்கு  அமைச்சர் எம்சி சம்பத் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.

கல்லணையில் திறக்கப்படும் காவிரி நீர், அணைக்கரை கீழணை வந்தடைந்து, அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரியை சென்றடைகிறது.
இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு அமைச்சர் எம்சி சம்பத் தண்ணீர் திறந்து விட்டார். ஏரியின் கீழ்,மேல் கரைகளில் உள்ள 34 மதகுகள் வழியாக மொத்தம் வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
47 புள்ளி 50 அடி மொத்த உயரம் கொண்ட ஏரியில், தற்போது 46 புள்ளி 62 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. வினாடிக்கு 790 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோன்று, கீழணையில் இருந்து அமைச்சர் எம்சி சம்பத் கலந்து கொண்டு வடவாறு மற்றும் வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், உள்ளிட்ட சுமார் 10 கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட்டார்.

வினாடிக்கு மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர், நாகை, தஞ்சாவூர், மாவட்டங்களில் சுமார் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் அன்புசெல்வன், சுரேஷ்குமார், அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.