ஓணம் பண்டிகை: சோனியா காந்தி, ராகுல் காந்தி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 17:35

புதுடில்லி

   ஓணம் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜாதி, மதம், மொழி தாண்டி கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா ‘ஓணம்’ பண்டிகையாகும். தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரளத்தில் சிங்கம் (ஆவணி) மாதம் தான் முதல் மாதமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையை புத்தாண்டு கொண்டாட்டமாகவும் சிறப்பிக்கின்றனர்.

சோனியா காந்தி வாழ்த்து

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மலையாள மக்களுக்கு தன் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில்,”இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மலையாள மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொடுத்தல், பகிர்தல் மற்றும் ஒன்றாக கொண்டாடுதல் ஆகியவை இந்த ஓணம் பண்டிகையின் சாரம்சமாகும்’’

‘‘இது அனைத்து சமூகத்தினரையும் இணைக்கும். அனைவரின் நம்பிக்கையையும் பிணைக்கும். நாட்டின் மதசார்பற்ற மற்றும் பன்முகத்தன்மையை மேலும் வலுபடுத்தும்” என்று சோனியா காந்தி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில்,ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் ஓணம் பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நாள், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு சேர்க்கட்டும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.