தலைமைச் செயலகத்தில் திடீரென புகுந்த பாம்பு: ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 17:23

சென்னை,

   சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நல்ல பாம்பு ஒன்று திடீரென புகுந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

தலைமைச் செயலக வளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகள் வருவதுண்டு. அந்தவகையில், தலைமைச் செயலகத்தை சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருவது வாடிக்கையாகி விட்டது.

பாம்புகள் தலைமைச்செயலகத்தில் நுழைந்து விடுவதால் தலைமைச் செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு விடும்.

அந்தவகையில், இன்று தலைமைச் செயலக வளாகத்தின் 4-வது நுழைவாயிலில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு கிடந்தது. இதை கண்டதும், ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்து தப்பித்து வந்ததால் அதனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக இறங்கினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஒருவழியாக அந்த நல்ல பாம்பு பிடிப்பட்டது.

தீயணைப்பு துறையினர் பிடிப்பட்ட பாம்பை அங்கிருந்து பத்திரமாக கொண்டு சென்றனர். பாம்பு பிடிப்பட்டதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.