கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு : அடுத்த ஆண்டு முதல் அமல்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 16:52

சென்னை,

   பொறியியல், மருத்துவப் படிப்புகளைப் போல இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்க தலைமை செயலாளர் கே.சண்முகம் தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் போலவே இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்லபடுத்த மாநிலம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு அது போன்ற கலந்தாய்வுகள் இல்லை. மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனியாக விண்ணப்பித்து, மதிப்பெண் மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.

எனவே இனி அது போல இல்லாமல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. மேலும் இது அடுத்த கல்வி ஆண்டு 2020-2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரியவருகிறது.