காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் : இந்தியா பதிலடி

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 15:35

ஜெனிவா,

   காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் வேறு எந்த நாடும் தலையிட முடியாது என ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

ஐநா மனித உரிமை கவுன்சிலின் 42வது கூட்டம் நேற்று ஜெனிவா நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி உரையாற்றினார். அப்போது காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக இந்தியாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து விசாரிக்க ஐநா மனித உரிமை கவுன்சில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் அமைச்சர் பேசியதற்கு இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விமர்ஷ் ஆர்யன் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அவர் பேசியதன் விவரம் :

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது. அதை ரத்து செய்தது எங்கள் அரசியல் சட்ட கட்டமைப்புக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் தலையிட வேறு எந்த நாடுகளுக்கும் உரிமை இல்லை.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துவது ஆச்சரியமாக இல்லை. இந்த சர்வதேச அரங்கை தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எங்கள் நடவடிக்கை தடையாக இருக்கும் என்பதை அந்நாட்டு அரசு நன்கு உணர்ந்துள்ளது.

சில பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும்படி ஜிஹாதிகளுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டிவிட்டு அங்கு இனபடுகொலை நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிடுகிறது. ஆனால் அவர்கள் கூறும் விஷயங்கள் நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டவை.

மனித உரிமைகளை பாதுகாப்பது குறித்து சர்வதேச சமூகத்தின் குரலாக இங்கு பேசுகிறோம் என பாகிஸ்தான் நாடகமாடுகிறது. ஆனால் உலக நாடுகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. பாகிஸ்தானின் உண்மையான முகம் என்னவென்பதை அனைவரும் அறிவார்கள்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், அஹமதியர்கள், ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவே காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கையில் எடுத்துள்ளது.

காஷ்மீர் நிலவரம் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் விசாரணை கோருவதற்கான எந்த உரிமையும் பாகிஸ்தானுக்கு இல்லை என்று விமர்ஷ் ஆர்யன் தெரிவித்தார்.