பிசினஸ் : திட்டமிட்டால் உடனே செய்யுங்கள்... நாளைக்காக காத்திருக்காதீர்கள்! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2019

கேர­ளத்­தில் வய­நாடு மாவட்­டத்­தில் உள்ள சென்­ன­லோடு கிரா­மத்­தில் அப்­போது மின்­சா­ர­மும் இல்லை; சாலை­க­ளும் இல்லை. அங்கு தினக்­கூலி ஒரு­வ­ரின் மகன் பி சி முஸ்­தபா. அவ­ருக்கு பத்­து­வ­ய­தி­லேயே தொழில் தொடங்­க­வேண்­டும் என்ற ஆசை வந்­து­விட்­டது. ”அப்பா கடு­மை­யாக உழைத்­தார். அவர் சம்­ப­ளத்­தில் கைக்­கும் வாய்க்­கு­மாக குடும்­பம் ஓடிக்­கொண்­டி­ருந்­தது. எனக்கு செல­வுக்­குப் பணமே கிட்­டாது. “ஆகவே கோடை விடு­மு­றை­யின்­போது என் மாமா­வி­டம் 100 ரூபாய் வாங்கி சின்­ன­தாய் ஒரு மிட்­டாய்க் கடை போடு­வேன். அதில் கிடைக்­கும் லாபம் என் செல­வு­க­ளுக்கு உத­வி­யது,” என்­கி­றார் முஸ்­தபா. சமை­ய­லுக்­குத் தயார் நிலை­யில் இருக்­கும் பொருட்­க­ளைத் தயா­ரிக்­கும் பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த ஐடி ப்ரெஷ் புட் நிறு­வன சி.இ.ஓ. இவர்.

இட்லி மற்­றும் தோசை மாவு, சுட­வைத்து சாப்­பி­டக்­கூ­டிய சப்­பாத்தி, பரோட்டா, ஆகி­ய­வற்­று­டன் தயிர், பன்­னீர் ஆகி­யவை இவர்­க­ளின் தயா­ரிப்­பு­கள். இது ஆண்­டுக்கு 100 கோடி ரூபாய் விற்­கும் நிறு­வ­னம். 2005-ல் ஒரு கிலோ மாவில் 10 பாக்­கெட் தின­மும் செய்த நிறு­வ­னம், இன்று தின­மும் 50,000 பாக்­கெட்­கள் செய்­கி­றது. பெங்­க­ளூரு, சென்னை, புனே, மும்பை, டெல்லி, ஐத­ரா­பாத், துபாய் ஆகிய இடங்­க­ளில் இருக்­கும் இதன் தொழி­ல­கங்­க­ளில் 1300 பேர் வேலை­பார்க்­கி­றார்­கள்.

முஸ்­தபா தன் உற­வி­னர்­க­ளான அப்­துல் நாசர், சம்­சு­தீன், ஜாபர், நவு­ஷத் ஆகி­யோ­ரு­டன் இணைந்து ஐடி ப்ரெஷ் புட் என்ற பிரைவேட் லிமி­டட் நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார். முஸ்­தபா 50 சத­வீத பங்­கு­கள் வைத்­துள்­ளார், மீதி மற்­ற­வர்­க­ளி­டம்.

வறு­மை­யான குடும்­பச் சூழ­லில் இருந்து வெற்­றி­க­ர­மான தொழி­ல­தி­ப­ராக முஸ்­தபா உயர்ந்­துள்­ளார். அவர் முயற்சி செய்­யா­மல் இருந்­தி­ருந்­தால் தன் தந்­தை­யைப் போலவே தினக்­கூ­லி­யாக தொடர்ந்­தி­ருக்­கக் கூடும்.

சிறு­வ­னாக இருக்­கும்­போது பள்ளி விடு­முறை நாட்­க­ளில் தந்­தைக்கு உத­வி­யாக முஸ்­தபா வேலை­செய்­வார். ஆறாம் வகுப்­பில் பெயில் ஆன­தும் படிப்பை நிறுத்­தி­விட்டு வேலைக்­குப் போகு­மாறு தந்தை கூறி­னார்.

 “என் கணித ஆசி­ரி­யர் மேத்யூ சார், என்னை படிக்க அனு­ம­திக்­கு­மாறு வேண்­டிக்­கொண்­டார். நான் ஆறாம் வகுப்பை  மீண்­டும் படித்­தேன். எனக்கு கணக்கு நன்­றாக வரும். ஆங்­கி­லம், இந்தி தான் சிர­மம்.

 “மேத்யூ சார் என்­மீது தனிக்­க­வ­னம் செலுத்தி பள்­ளிக்­கூ­டம் முடிந்­த­பின்­னர் சொல்­லிக்­கொ­டுத்­தார். ஏழாம் வகுப்­பில் முத­லா­வது மதிப்­பெண் எடுத்து எல்­லோ­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­னேன்,” என்­கிற முஸ்­தபா, தொடர்ந்து சிறப்­பாக படித்­தார்.

பத்­தாம் வகுப்­புக்­குப் பின்­னர் கோழிக்­கோட்­டில் உள்ள பரூக் கல்­லூ­ரி­யில்  பல்­க­லைக்­க­ழக புது­முக வகுப்­பில் சேர்ந்­தார். பணம் கட்ட சிர­மம். அவ­ரது தந்­தை­யின் நண்­பர் ஒரு­வர் விடு­தி­யில் இல­வச உண­வுக்கு ஏற்­பாடு செய்­தார்.

அவர் பொறி­யி­யல் நுழை­வுத் தேர்­வில் மாநி­லத்­தில் 63வது இடம் பெற்று, ரீஜி­னல் எஞ்­சி­னி­ய­ரிங் கல்­லூ­ரி­யில் நுழைந்­தார். தனக்­குப் பிடித்த கணிப்­பொறி அறி­வி­யல் படித்­தார். 1995-ல் பொறி­யி­யல் முடித்­த­பின்­னர்  முஸ்­தபா 6000 ரூபாய் சம்­ப­ளத்­தில் பெங்­க­ளூ­ரு­வில் ஒரு சிறு நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர்ந்­தார். இரு­மா­தங்­கள் கழித்து மோட்­டா­ரோ­லா­வில் 15,000 ரூபாய்க்கு வேலை கிடைத்­தது. அந்­நி­று­வ­னம் அவரை அயர்­லாந்து அணுப்­பி­யது. அங்கே ஒன்­றரை ஆண்­டு­கள் பணி­செய்­தார்.

மோட்­டா­ரோ­லா­வில் இருந்து துபா­யில் சிட்டி பேங்­கில் வேலைக்­குச் சேர்ந்­தார். அங்கே ஒரு லட்­ச­ரூ­பாய்க்கு மேல் சம்­ப­ளம். “நான் முதல் மாத சம்­ப­ள­மான 1.3 லட்­சத்தை என் தந்­தைக்கு அவ­ரது கடன்­களை அடைக்க கொடுத்­த­னுப்­பி­னேன்.

“அதை வாங்­கிய அவர் கண்­ணீர் விட்­டார். அவ­ரது வாழ்­நாள் கடன் அவ­ரது மக­னின் ஒரு மாத சம்­ப­ளம் என்று அறிந்­த­தும் உரு­வான உணர்ச்­சிப்­பெ­ருக்கு அது. அவ­ரால் கண்­ணீ­ரைக் கட்­டுப்­ப­டுத்­தவே முடி­ய­வில்லை. கையில் பணத்­து­டன் அழு­து­கொண்டே இருந்­தி­ருக்­கி­றார்,” என்­கி­றார் முஸ்­தபா.

துபா­யில் சம்­பா­தித்­த­தைக் கொண்டு கிரா­மத்­தில் பெற்­றோ­ருக்கு வீடு கட்­டி­னார்.  சகோ­த­ரி­க­ளுக்கு திரு­ம­ணம் செய்­வித்­தார். முஸ்­த­பா­வுகு 2000த்தில் திரு­ம­ணம் ஆனது. மூன்று மகன்­கள் உள்­ள­னர்.

மத்­தி­யக்­கி­ழக்­கில் ஏழு ஆண்­டு­க­ளைக் கழித்­து­விட்டு, அவர் 2003ல் பெங்­க­ளூரு திரும்­பி­னார். 15 லட்­ச­ரூ­பாய் சேமிப்பு இருந்­தது. அவர் எம்­பிஏ படிக்க விரும்­பி­னார்.

“எனக்கு கேட் மதிப்­பெண் சிறப்­பா­கக் கிடைத்­தி­ருந்­தா­லும் முன்பு என் பொரு­ளா­தார சிக்­கல்­க­ளால் மேல்­ப­டிப்பு படிக்­க­மு­டி­ய­வில்லை,” என்று நினை­வு­கூ­ரும் முஸ்­தபா பெங்­க­ளூ­ரு­வில் ஐஐ­எம்­மில் எம்­பிஏ சேர்ந்­தார். படிக்­கும்­போது தியப்­ப­சந்­தி­ரா­வில் உற­வி­னர் நாசர் நடத்­திய மளி­கைக் கடைக்கு அடிக்­கடி வந்து தன் உற­வி­னர்­க­ளு­டன் பொழு­து­போக்­கு­வார்.

இட்லி, தோசை மாவு செய்­யும் தொழி­லைத் தொடங்­க­லாமே என்று உற­வி­னர் ஒரு­வர் சொல்ல, முஸ்­தபா அதில் குதித்­தார் ஒரு நாள் அவ­ரது உற­வி­ன­ரான சம்­சு­தீன், பக்­கத்­துக்­க­டை­க­ளில் பிளாஸ்­டிக் பைக­ளில் தோசை­மாவு விற்­ப­தா­க­வும் நாமும் அது­போல் செய்­ய­லாமே என்­றார்.

“செய்­ய­லாம் என்று முடி­வெ­டுத்து 25,000 ரூபாய் முத­லீடு போட்­டோம்,” என்­கி­றார் முஸ்­தபா. 2 கிரைண்­டர், ஒரு மிக்­ஸர், சீல் பண்­ணும் எந்­தி­ரம் ஆகி­ய­வற்­று­டன் 550 சதுர அடி­யில் ஒரு இடம் பிடித்­த­னர். பெங்­க­ளூ­ரு­வில் 20 கடை­க­ளுக்கு ஐடி (அதா­வது இட்லி(ஐ), தோசை(டி)) என்ற பிராண்ட் பெய­ரில் விநி­யோ­கம் செய்­த­னர்.

முதல் நாளி­லி­ருந்தே லாபம்­தான். முஸ்­தபா மேலும் 6 லட்­ச­ரூ­பாய் முத­லீடு செய்து இயந்­தி­ரங்­கள் வாங்­கிப்­போட்­டார். 800 சதுர அடி­யில் இன்­னும் பெரிய இடத்­துக்கு நகர்ந்­த­னர். இரண்டு ஆண்­டு­க­ளில் 3,500 கிலோ மாவு தின­மும் செய்ய ஆரம்­பித்­த­னர். 300 கடை­க­ளுக்கு மேல் விநி­யோ­கம் செய்­த­னர்.

எம்­பி­ஏவை 2007-ல் முடித்­த­பின்­னர் முஸ்­தபா ஐடி ப்ரெஷ் நிறு­வ­னத்­தில் சிஇஓ வாகச் சேர்ந்­தார். மார்க்­கெட்­டிங் மற்­றும் நிதி நிர்­வா­கத்­தைக் கவ­னித்­தார். அவர்­க­ளின் பொருட்­க­ளுக்கு தேவை அதி­க­ரித்­தது. முஸ்­தபா மேலும் 40 லட்­ச­ரூ­பாயை 2008ல் முத­லீடு செய்­தார். ஹோஸ்­கோட் தொழில்­பேட்­டை­யில் 2500 சதுர அடி ஷெட் ஒன்­றும் வாங்­கி­னார்.

துபா­யில் பணி­பு­ரிந்­த­போது கேர­ளா­வில்  ஒரு இடம் வாங்­கி­யி­ருந்­தார். 2009-ல் அதை விற்று மேலும் 30 லட்­ச­ரூ­பாய் முத­லீடு செய்­தார். துபா­யில் 2013-ல் விற்­ப­னையை ஆரம்­பித்­த­னர். “2014-ல் ஹீலி­யன் வெஞ்­சர் பங்­கு­தா­ரர்­கள் மூலம் முதல் கட்­டம் 35 கோடி ரூபாய் திரட்­டி­னோம். தொழிலை விரி­வு­ப­டுத்­த­வும் மேலும் பொருட்­களை அறி­மு­கப்­ப­டுத்­த­வும் இந்த பணம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது,” என்­கி­றார் முஸ்­தபா.

இரண்­டா­வது கட்­ட­மாக 150 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறு­வ­னம் முடிவு செய்­துள்­ளது. வேறு நக­ரங்­கள், அயல்­நா­டு­கள் ஆகி­ய­வற்­றில் விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­னர். இப்­போது நாடு முழுக்க இருக்­கும் தங்­கள் தொழி­ல­கங்­கள் மற்­றும் துபா­யில் உள்ள தொழி­ல­கம் ஆகி­யவை மூலம்  தின­மும் 50,000 கிலோ மாவு செய்­கி­றார்­கள். லட்­சக்­க­ணக்­கான இட்­லி­க­ளாக அது மாறு­கி­றது,

காற்­றுப்­பு­காத பைக­ளில் ஏழு­நாட்­கள் கெட்­டுப்­போ­கா­மல் இருக்­கும் வகை­யில் அவை உள்­ளன. “ஐடி ப்ரெஷ் பொருட்­கள் 100 சத­வீ­தம் இயற்­கை­யா­னவை. எந்த வேதிப்­பொ­ரு­ளும் சேர்க்­கப்­ப­டு­வ­தில்லை,” என்­கி­றார் முஸ்­தபா.

இட்லி தோசை மாவு மட்­டு­மல்­லா­மல், இவர்­கள் தயா­ரிப்­பான உடனே சூடு பண்ணி சாப்­பி­டக்­கூ­டிய பரோட்­டா­வும் சுறு­சு­றுப்­பாக விற்­பனை ஆகி­றது. தயிர், பன்­னீ­ரும் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ள­னர். ஐடி­யின் விற்­ப­னை­யில் ஐம்­பது சத­வீ­தம் இட்லி/தோசை மாவு­தான். 35 சத­வீ­தம் பரோட்டா. மீதி சப்­பாத்தி, தயிர், பன்­னீர் விற்­பனை.

இன்று ஐடி ப்ரெஷ் தயா­ரிப்­பு­கள் ஏழு நக­ரங்­க­ளில், 16,000 கடை­க­ளில் விற்­பனை ஆகின்­றன. பெங்­க­ளூ­ரு­வில் அவர்­க­ளின் பிர­தான தொழி­ல­கம் 15,000 சதுர அடி­யில் உள்­ளது. ஹோஸ்­கோட் அருகே உல­கத்­த­ரம் வாய்ந்த தயா­ரிப்­ப­கம் ஒன்­றும் 75,000 சதுர அடி­யில் ஓரா­ண­டில் வர உள்­ளது.

“குடும்­பத்­தால் நடத்­தப்­ப­டும் தொழில் என்­ப­தி­லி­ருந்து தேர்ந்த முறை­யில் நடத்­தப்­ப­டும் நிறு­வ­ன­மாக நாங்­கள் மாறி உள்­ளோம். அனைத்து தயா­ரிப்­பு­க­ளும் தானி­யங்­கி­கள் மூலம் நடக்­கின்­றன. தொழில்­நுட்­பங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன,” விளக்­கு­கி­றார் முஸ்­தபா.

விரை­வில் மொறு­மொறு வடை­க­ளும் வீட்­டி­லேயே செய்­யு­மாறு ஒரு தயா­ரிப்பு வர உள்­ளது. புதிய அறி­மு­கங்­க­ளுக்கு இங்கே முக்­கி­யத்­து­வம் உள்­ளது. “வடை மாவு பாக்­கெட்­டில் ஒரு குழாய் இருக்­கும். அதை அமுக்­கி­னால் வட்ட வடி­வில் மாவு விழும். கைவைக்­கவே வேண்­டாம். வட்­ட­வ­டி­வில் வடை­கள் செய்­ய­லாம். இதற்கு நாங்­கள் காப்­பு­ரிமை பெற்­றுள்­ளோம்,” கூறு­கி­றார் முஸ்­தபா.

“எதா­வது ஆரம்­பிக்­க­வேண்­டும் என்று திட்­ட­மிட்­டால் உடனே செய்­யுங்­கள். நாளைக்­கா­கக் காத்­தி­ருக்­கா­தீர்­கள்,” என்­பதே தொழில் தொடங்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு முஸ்­தபா சொல்­லும் அறி­வுரை.