உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 14:25

மதுரா

   உத்தரபிரதேசத்தின் மதுராவில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் (எப்எம்டி), புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், வரும் 2024ம் ஆண்டுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகள், ஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு 12,652 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசத்தின் மதுராவில் தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் கலந்துகொள்ள மதுராவிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், பிரதமர் மோடி, குப்பைகளில் இருந்து நெகிழிப்பைகளை எடுத்துக் கொண்டிருந்த நெகிழிப்பொருட்கள் சேகரிப்பு பெண்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

இதையடுத்து அங்கிருந்த கால்நடைகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இவ்விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மதுரா தொகுதி எம்பி ஹேமமாலினி பங்கேற்றனர்.

இந்த விழாவில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் (என்ஏடிசிபி) மற்றும் தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் கால்நடை, சுற்றுலா மற்றும் சாலை கட்டுமானம் தொடர்பான உத்தரபிரதேச அரசின் 16 திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”அக்டோபர் 2, 2019க்குள் நமது வீடுகள், அலுவலகங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை நாம் செய்யவேண்டும். இந்த பணியில் சேர சுய உதவிக்குழுக்கள், சிவில் சமூகம், தனிநபர்கள் மற்றும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது. உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தவேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாத பிரச்சனை

தொர்ந்து பேசிய பிரதமர் மோடி,”இன்று பயங்கரவாதம் என்பது நாட்டின் எல்லைகளுக்குள் கட்டுப்படாத ஒரு சித்தாந்தமாகவே மாறிப்போய் உலகளாவிய பிரச்சனையாக ஆகிவிட்டது. நமது அருகாமையில் (பாகிஸ்தான்) வேரூன்றி செழிக்கும் இந்த பயங்கரவாதம் இந்த உலகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (11-9-1893) சுவாமி விவேகானந்தா சிகாகோ நகரில் உலக சமாதானம் தொடர்பாக தனது வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே செப்டம்பர் 11ம் தேதி உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்” என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.