ஓணம் பண்டிகை: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 11:17

புதுடில்லி

   ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜாதி, மதம், மொழி தாண்டி கேரளத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா ‘ஓணம்’ பண்டிகையாகும். தமிழ்நாட்டில் சித்திரை போன்று, கேரளத்தில் சிங்கம் (ஆவணி) மாதம் தான் முதல் மாதமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையை புத்தாண்டு கொண்டாட்டமாகவும் சிறப்பிக்கின்றனர்.

குடியரசு தலைவர் வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,”நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கேரள மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அறுவடை திருவிழா, அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தையும், வாழ்க்கை செழிமையாகவும் இருக்க வழிவகுக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசு துணை தலைவர் வாழ்த்து

இதேபோல் குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு டுவிட்டரில்,”கேரள மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை கவுரவப் படுத்தும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், நம் நாட்டில் அமைதி, செழிமை, மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,”ஓணம் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாளில், சமூகத்தில் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை செழிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி வாழ்த்து

மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டரில்,”ஓணம் பண்டிகையை முன்னிட்டு, என் மலையாள சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள். கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டுவந்து, அறுவடைக்கு தயாராவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.