ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கூடாது : காரி லாம் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019 20:46

ஹாங்காங்,

   ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று ஹாங்காங் நிர்வாக தலைவர் காரி லாம் வலியுறுத்தியுள்ளார்.

ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா ரத்து செய்யப்பட வேண்டும். ஹாங்காங் நிர்வாக் தலைவர் காரி லாம் பதவி விலக வேண்டும். ஹாங்காங்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 வாரங்களாக ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஹாங்காங் போராட்டத்திற்கு எதிராக சீனா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் போராட்டக்காரர்கள் சிறிதும் பயப்படாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்தால் ஹாங்காங்கின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலீசார் நடத்தும் வன்முறை தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் ஹாங்காங் அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.

அதன் காரணமாக போராட்டக்காரர்களின் முதல் கோரிக்கையான கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வழிவகுக்கும் மசோதா ரத்து செய்யபடுவதாக காரி லாம் கடந்த வாரம் அறிவித்தார்.

இருப்பினும் தங்கள் 5 கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரம் நோக்கி பேரணி நடத்தினர். ஹாங்காங் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஹாங்காங் நிர்வாக தலைவர் காரி லாம் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் :

ஹாங்காங் – அமெரிக்கா பொருளாதார உறவில் எதேனும் மாற்றம் வந்தால் அது இரு நாடுகளுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா உட்பட எந்த நாடும் தலையிடுவது முறையாகாது.

ஹாங்காங் மக்கள் இனியும் அமெரிக்காவிடம் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றும்படி கோர மாட்டார்கள் என நம்புகிறேன் என காரி லாம் தெரிவித்தார்.

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என சீனாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் ஹாங்காங் போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவின் இந்த குற்றச்சாட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார். சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு வரும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஹாங்காங் விஷயத்தில் பெரிதாக தலையிடவில்லை. ஹாங்காங் விவகாரத்தில் அமைதியான வழியில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.