கதை திருட்டு நடக்கிறது!

10 செப்டம்பர் 2019, 06:14 PM

தியன் பிக்சர்ஸ் சார்பில் எஸ். நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் ‘படைப்பாளன்.’ இப்படத்தை எல்.எஸ். பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் எல்.எஸ். பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், ‘காக்கா முட்டை’ ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர் பிரபுராஜா பேசியதாவது...

‘‘இந்த படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்த படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதையை ரெடி பண்ண நீங்கள்தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகாரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்த படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்த படத்தை எடுக்க வில்லை’’ என்றார்.