ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் சீனா – பாகிஸ்தானுக்கு இந்தியா எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019 17:12

புதுடில்லி,

சீனா – பாகிஸ்தான் சமீபத்தில் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் சீனா- பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் ரவீஷ்குமார் கூறுகையில்:

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது இருநாட்டு அமைச்சர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறித்து பேசப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் நடந்து வரும் சீனா- பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரப் பணிகள் குறித்து இந்தியா தொடர்ந்து தன் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியில் மற்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது. இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்துகிறது என்று ரவீஷ்குமார் தெரிவித்தார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கடந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தன் பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்க பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என வாங் யீ தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்த நிலையில் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.