மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்: சோனியா காந்தி - சரத் பவார் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019 16:54

புதுடில்லி

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ள நிலையில், சோனியா காந்தியும் சரத் பவாரும் இன்று சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து களமிறங்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். டில்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும், எந்த தொகுதிகளில் எல்லாம் இருகட்சிகளும் போட்டியிடும் என்பது குறித்து வரும் நாட்களில் பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணப்படும். அதன்பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.