தலிபான்களுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019 16:47

வாஷிங்டன்,

தலிபான்களுடன் இனி அமைதி பேச்சுவார்த்தை நடக்காது என அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆப்கனில் நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலிபான்களுடன் இறுதி ஒப்பந்தத்தை முடிவு செய்ய அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள கேம்ப் டேவிட் இல்லத்தில் தலிபான் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த இந்த பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் திடீரென்று ரத்து செய்தார்.

கடந்த வாரம் ஆப்கன் தலைநகர் காபுலில் நடந்த தாக்குதலில் அமெரிக்க வீரர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதற்கு தலிபான் பொறுப்பேற்றது. இதன் காரணமாக அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.

இதற்கு தலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதிபர் டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்கர்களின் உயிர்பலி அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் பேசிய அதிபர் டிரம்ப் இனி தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடக்காது என அறிவித்தார்.

ஆப்கனில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்கா மீது அழுத்தத்தை அதிகரிக்க தலிபான்கள் முயற்சி செய்தனர். பேச்சுவார்த்தை அவர்களுக்கு சாதகமாக இருப்பதற்கு சில அப்பாவி மக்களை கொல்ல வேண்டும் என் தலிபான்கள் நினைத்தனர். ஆனால் என்னிடம் அது நடக்காது.

கடந்த 10 வருடங்களை விட தலிபான்கள் மீது கடந்த நான்கு நாட்களில் அதிகளவில் தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆப்கனில் இருந்து நிச்சயம் ஒருநாள் அமெரிக்க படைகள் வெளியேறும். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் வெளியேறுவார்கள்.

கேம்ப் டேவிட்டில் தலிபான் தலைவர்களை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்தது நான் தான். அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்ய வேண்டும் என்றும் நான் தான் முடிவெடுத்தேன்.

ஆப்கனில் ஒரு அமெரிக்க வீரரையும் 12 பொதுமக்களையும் கொன்று தங்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்க அவர்கள் நினைத்ததால் பேச்சுவார்த்தையை ரத்து செய்தேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீதான பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படவுள்ள நிலையில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.