இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019 15:51

புதுடில்லி

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் ஒளியும் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.

பீகாரின் மோத்திஹரியில் இருந்து 69 கிமீ தொலைவில் நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது. கடந்த 1973 ம் ஆண்டுமுதல் டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் நேபாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன. இந்நிலையில், குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த திட்டத்தில், பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோல் அனுப்பப்படவுள்ளது.

மொத்தம் ரூ.325 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை வீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளியும் கூட்டாக இன்று தொடங்கி வைத்தனர்.

பிரதமர் மோடி டில்லியில் உள்ள தன் அலுவலகத்தில் இருந்தும், நேபாள பிரதமர் காத்மண்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தும் இதைத் தொடங்கி வைத்தனர்.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”பெட்ரோல் அனுப்புவதற்காக தெற்காசியாவில் ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி இன்னொரு நாட்டிற்குள் பெட்ரோல் அனுப்ப பயன்படும் முதல் திட்டமாகும் இது. எண்ணெய் குழாய அமைக்க 30 மாதங்கள் ஆகும் என முதலில் மதிப்பிடப்பட்டது,  எனினும், 15 மாதங்களிலேயே முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. இது இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலனாகவே இத்திட்டம் பார்க்கப்படும்.

இந்த திட்டத்தின்மூலம், நேபாளத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்கள் மலிவு விலையில் அனுப்பிவைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

2015ம் ஆண்டு நேபாளம் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீள் கட்டமைப்பு பணிகளுக்கு நட்பு நாடான இந்தியா கை கொடுத்து உதவியது. இந்தியாவின் சார்பாக கூர்கா மற்றும் நுவகோட் மாவட்டங்களில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நேபாளத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர் ஒளியின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.