மத்திய அரசின் 100 நாள் சாதனைகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019 14:21

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 100 நாட்கள் சாதனைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  பட்டியலிட்டார். ஜிஎஸ்டி, வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து சென்னையில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் ஆட்சி 100 நாட்களை கடந்துள்ளது.

நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை, கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மத்திய அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து பேசினார். அதன் விவரம்:

பாஜக தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தால் பொதுமக்களுக்கு நல்ல பலன் இருக்க வேண்டும். ஆனால் சட்டப்பிரிவு 370 அவ்வாறு இல்லை. அதனால் அதை மத்திய அரசு நீக்கியுள்ளது.

அதை தொடர்ந்து ஜம்மு- காஷ்மீரிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இனி ஜம்மு காஷ்மீரில் பல மாநிலங்களில் இருந்தும் முதலீடு பெருகும்.

சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இந்திய பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய சிறிய வங்கிகளின் இணைப்பு உதவும்.

நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது. பொருளாதாரம் வேகமாக வளர ஜிஎஸ்டி உதவும்.

மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மோட்டார் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை மீட்பதற்கு மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் 1.95 கோடி வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம்.

ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த ப்ரீமியத்தில் உயரிய சிகிச்சைகளை ஏழைகள் பெறுகின்றனர். 41 லட்சம் பேர் இதுவரை இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைந்து உள்ளது.

மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம்.

விவசாயிகளுக்கான நிதியுதவி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இதை தவிர ஓய்வூதியமாக ரூ. 3,000 அளிக்கப்படுகிறது. இதுவரை 6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது .

பாஜக ஆட்சியில் அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கமளிக்கப்படும்.

வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அதிகாரிகள் பொருளாதார துறையினருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சந்திரயான் – 2 திட்டம் 99.9 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.