காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க ஐநா மனித உரிமை ஆணைய தலைவர் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019 20:01

ஜெனிவா,

காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பாச்செலெட் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐநா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து தொடர்ந்து அறிக்கை வந்து கொண்டிருப்பதாக ஐநா மனித உரிமை ஆணைய தலைவர் மிச்செல் பாச்செலெட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா நகரில் இன்று நடந்த ஐநா மனித உரிமை கவுன்சிலின் 42வது கூட்டத்தில் மிச்சென் பாச்செலெட் பேசுகையில் :

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள், உள்ளூர் அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளது போன்ற இந்திய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்களின் மனித உரிமைகள் மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தை நினைத்து கவலை அடைந்துள்ளேன்.

காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை இருநாடுகளும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். முக்கியமாக தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி இந்தியாவிடம் கேட்டுக்கொள்கிறேன். காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

காஷ்மீர் மக்களின் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுத்தாலும் அதை பற்றி முதலில் மக்களிடம் கருத்துகளை கேட்பது முக்கியம்.

சமீபத்தில் அசாம் மாநிலத்தில் வெளியான தேசிய குடியுரிமை பதிவேடு பட்டியலில் இடம்பெறாத 19 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

பட்டியலில் விடுப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு உரிய நடைமுறை பின்பற்றப்படுவதை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும். பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் நாடு கடத்தப்பட கூடாது. அவர்கள் நாடு இன்றி தவிக்கும் நிலை ஏற்பாடாமல் பாதுகாக்கும்படி இந்திய அரசிடம் கோருகிறேன் என்று மிச்செல் பாச்செலெட் கூறினார்.