ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019

* ராகு காலத்தில் புற்றுக்கு பூஜை செய்து பால் ஊற்றி வழிபடலாமா? எம். முத்துப்பாண்டி, தென்காசி.

அப்படி செய்யச் சொல்லி சாத்திரம் எதுவும் இல்லை. இருப்பினும் சில பழமையான மாரியம்மன் கோயில்களில் புற்றும் பூஜையும் வழக்கில் உள்ளன. எனவே புதிய பாம்பு புற்றுக்கு பூஜை செய்தல், பால் ஊற்றுதல் போன்றவை கொஞ்சம் அபாயமான விஷயமாகவும் இருப்பதால் கோயில்களில் வழக்கத்தில் உள்ள புற்றுக்கு செய்து வழிபடுவதே நல்லது.

* ஸ்மார்த்த ஏகாதசி, வைஷ்ணவ ஏகாதசி என காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளன. எதை கடைப்பிடிப்பது? ஏ. பாஸ்கர், கடையநல்லூர்.

பொதுவாக, விரத நாட்கள் இதுபோல இரண்டாகவே வருகின்றன. காரணம் – சிலர் இரவில் இருப்பதையும் சிலர் பகலில் இருப்பதையும் விரதத்திற்காக ஏற்றுக் கொள்வது வழக்கில் உள்ளது. கிருத்திகை விரதத்தை மாலை அஸ்தமனத்திற்கு பிறகு நட்சத்திரம் வந்து இரவு முழுவதும் இருந்தால், அன்றைய தினம் விரதம் இருக்கின்றனர். சில கோயில்களிலும் அன்றைய தினமே கிருத்திகை வழிபாடும் நிகழ்த்தப்படுகின்றது.சிலர் சூரிய உதயத்திற்குப் பிறகு கிருத்திகை நட்சத்திரம் இருந்தால்தான் அதாவது பகல் 11 மணி வரை இருக்கும் நாளிலேயே விரதம் இருக்கின்றார்கள். வைதீஸ்வரன் கோயில் போன்ற திருத்தலங்களில் அன்றைய தினமே கிருத்திகை வழிபாடும்  கொண்டாடப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களையும் ‘மலை கார்த்திகை’ என்றும், ‘வைதீஸ்வரன் கோயில் கார்த்திகை’ என்றும் பெயரளவில் பிரித்து விரதங்கள் கடைப்பி டிக்கப்படுகின்றன. அதுபோல  ஸ்மார்த்த ஏகாதசி, வைணவ ஏகாதசி என்றும் ஏகாதசி விரதங்கள் பிரிந்துள்ளன. விரதத்தை ஸ்மார்த்த ஏகாதசிகளிலும் கோயில் வழிபாட்டை வைஷ்ணவ ஏகாதசிகளிலும் சிலர் கடைப்பிடிக்கின்றனர். இது விஷயத்தில் அவரவர் குடும்பத்து பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதும் நன்று.