அக்னி நட்சத்திரம்! – மு.திருஞானம்

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019

உடனே, அர்ஜுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான். உடன் ஒரு ரதத்தையும் வழங்கினான். அப்பொழுது கண்ணன் ‘‘அக்னிதேவனே!  உன் பிணியை தீர்த்துக்கொள்ளவதற்காக ௨௧ நாட்கள் மட்டும் இந்த காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்’’ என்றார். அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். கண்ணன் ரதம் ஓட்ட அர்ஜுனன் வில், அம்புடன் தயாரானான். இருவரும் ரதத்தில் வனத்தை சுற்றி வந்தனர். இதை கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்தரவிட்டான்.

மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ஜுனனை பார்க்க, அர்ஜுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க ‘சரக்கூடு’ ஒன்றை  தன்னிடம் இருந்த அம்புகளால் கட்டித் தடுத்தான்.

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டான்.

இங்கிருந்த பாம்புகள் எல்லாம் அழிந்தன. அவற்றின் தலைவி வாசுகி தப்பித்து கர்ணனிடம் சென்று தன்னை நாகாஸ்திரமாக பயன்படுத்தி அர்ஜுனனை கொல்ல வேண்டும் என்று பழி வாங்கும் எண்ணத்துடன் கூறியது. கர்ணன் அதன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான்.  காண்டவ வனம் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் காட்டுக்குள் இருந்த பல ஜீவராசிகள் மடிந்தன. அப்பொழுது காண்டவ வனத்தில் இருந்த அசுர சிற்பி மயன் – நெருப்புக்குள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தான். அப்பொழுது அர்ஜுனன் மயனை நெருப்பிலிருந்து மீட்டு பாதுகாப்பாக வெளியே கூட்டி வந்தான். ராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தைதான் அரசு சிற்பி மயன். தன்னை காப்பாற்றிய அர்ஜுனனுக்காக நன்றிக்கடனாக இந்திர பிரஸ்தத்தில் மயன் கண் கவரும் ஒரு பளிங்கு மணிமண்டபம் கட்டி கொடுத்தான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் கண்ணனிடமும் அர்ஜுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது. நார் உரிக்கக்கூடாது. விதை விதைக்கக்கூடாது. கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது. நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது. வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்கு சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான – தர்மங்கள் செய்யலாம், தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம். நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல்  ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம். ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்.

வயதானவர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம். அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களை தரும்.