மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 170

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019

கோட்புலியார், போர்முனையில் வெற்றி கொண்டு மன்னரிடம் நிதி பெற்றுத் திரும்பினார். வழியில் தம் சுற்றத்தார் செய்த பிழையை அறிந்தார். ஆனால் அவ்வாறு தாமறிந்த செய்தியை பிறரறியாதபடி மறைத்துக் கொண்டு ‘அச்சுற்றத்தாரையெல்லாம் வெட்டி வீழ்த்துவேன்’ என்று துணிவு கொண்டு வந்தார்.

வெற்றி வீரராகத் திரும்பிய கோட்புலியாரை அவரது சுற்றத்தார் எதிர்கொண்டு வரவேற்றார்கள். கோட்புலி நாயனார் அவர்களுக்கு இனிய மொழி கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

அவ்வூரிலுள்ள தமது சுற்றத்தாருக்கெல்லாம் பைந்துகிலும், நிதியமும் தருவதாகக் கூறி, தமது மாளிகைக்கு  அழைத்தார்.  எல்லோரும் வந்து சேர்ந்ததும். அவர்களுக்கு பெருநிதியம் கொடுப்பவர் போலக் காட்டி தம் பெயருள்ள கோட்புலி என்னும் காவலனை தலைவாயிலிருந்து காவல் செய்யும்படி வைத்தார். பிறகு ‘இறைவரது வலிய ஆணையையும் மறுத்து, இறைவர் அமுதுக்குரிய நெல்லை அழித்து அடாத செயல்கள் புரிந்த இவர்களைக் கொல்லாமல் விடுவேனோ?’ என்று மிக சினந்தெழுந்து தம் தந்தை, தாய், உடன் பிறந்தார், மனைவியர்கள், சுற்றத்தார், ஊரிலுள்ள உரிமையடிமைகள் இன்னும் அழுதபடி நெல்லை அழித்துண்ண இசைந்தவர்கள் எல்லோரையும் உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.

அதன் பிறகு ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் எஞ்சி நின்றது. நாயனார் அதைக் கொல்ல அதன் மீது பாய்ந்தபோது, வாயிற்காப்போன் அவரைப் பார்த்து, ‘பெருமானே! இந்தக் குழந்தை என்ன செய்தது?’  இது சிவன் சோற்றை உண்ணவில்லையே?  ஒரு குடிக்கு ஒரு பிள்ளை. இந்த குழந்தையை வெட்டாது அருள் புரியும்’ என்று கெஞ்சினான்.

அதற்கு, கோட்புலி நாயனார் ‘இந்த  குழந்தை சிவன் சோற்றை உண்ணவில்லை என்பது உண்மைதான்! ஆனால், அந்தச் சோற்றை உண்டவளின் முலைப்பாலை உண்டது’ என்று கூறி அந்தக் குழந்தையையெடுத்து மேலே வீசியெறிந்து, வாளினால் இரு துண்டாக விழும்படி வெட்டித் தள்ளினார். அந்நிலையில் சிவபெருமான் தோன்றி ‘புகழோய்! உன்னுடைய கையிலேந்திய வாளினால் வெட்டுண்டு உன் சுற்றத்தார் எல்லோரும் பாசம் நீங்க பெற்றார்கள். அவர்கள், யாவரும் பொன்னுலகை விடச் சிறந்த உலகையடைந்து, அதன் பிறகு நமது உலகத்தினை சார்வர். நீ இந்நிலையிலேயே நம்முடன் வருவாயாக’ என்று கூறி அன்பான கோட்புலி நாயனாரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு எழுந்தருளினார்.

அத்தனாய், அன்னையாய், ஆருயிராய் அமிர்தமாகி முத்தனாம் முதல்வன் தன் திருவடிகளை அடைந்து சுற்றத்தாரைத் தண்டித்த கோட்புலியாரின் அடிகளை வணங்கிவிட்டு அடுத்ததாகப் பத்தராய் பணிவார்தம் தன்மையைப் பகர்வோம்.

சிவபெருமான் திருவடிக்கே அன்பு பூண்டு, பக்தியுடன் தவத்தோடு பணிபுரிபவர்கள் பத்தராய்ப் பணிவார் ஆவர். அண்ணலார் அடியார்கள் எவரையும் தாம் கண்டால் உள்ளம் கூச, மிகவும் குதூகலமடைந்து கொண்டாடி மனமகிழ்வார்கள். பசுவைத் தொடர்ந்து செல்லும் கன்றைப்போல் அடியார்களைத் தொடர்ந்து செல்வார்கள்.

பேசுவனவெல்லாம் இனிய மொழிகளாகவே பணிவுடன் பேசுவார்கள். எவரேனும் சிவ அர்ச்சனை செய்வதைக் கண்டால், இனிது மகிழ்ந்து வணங்கி, அவர்களது பாவனையாலும் அருள் நோக்கத்தாலும், பலரும் காணும்படிப் பயன் பெறுவார்கள். தாங்கள் கொள்ளும் அன்பின் திறத்தாலே மேம்பாடுடை யவர்களுக்கெல்லாம் மேம்பாடுடையவர்களாகத் திகழ்வார்கள். சிவபெருமானையும் சிவனடி யார்களையும் தெவிட்டாத பெருவிருப்பத்தினால் மேன்மேலும் உவகை  பொங்க விரும்பிப் பூஜிப்பார்கள்.

பக்தராய் விளங்குவோர், தாங்கள்  செய்யும் செயல்கள் எதுவாக இருந்தாலும், அவையெல்லாம் ‘இறைவரின் திருவடிக்கே சேரும் தகுதியுடையவனவாகுக’ என்று அன்பினோடு சிவப்பணிகளைச் செய்வார்கள். பிறவிக் குழியில் விழாதவர்கள் அவர்களது புகழுக்கு இவ்வுலகத்தையெல்லாம் ஒப்பாக கூறினும் போதாது. அவர்கள் சிவபெருமானைப் பற்றிய கதைகளைக் கேட்கப் பெரிதும்  விரும்புவார்கள். சிவபெருமானிடம் தாம் கொண்ட  அன்பின் இருக்கை அயலார் அறியாது ஒழுகும் திறத்தாலே, அவரது செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை அடைவதற்கு உரியவராவார்கள். சிவபெருமானைப் பணிந்து, உள்ளம் உருகுவார்கள். அதனால் உள்ளூர எழும் இன்பப் பெருக்கால் மகிழ்வடைந்து, நா தழுதழுத்த வண்ணம் பேசுவார்கள். கண்களினின்று ஆனந்தக் கண்ணீர் பெருகி, ஓட, மெய்சிலிர்க்க, உடல் நடுங்க செயலற்று நிற்பார்கள்.

இத்தகைய மெய்க்குணம் வாய்ந்த பக்தர்கள்  என்னும் திருத்தொண்டர்கள் நின்றாலும், இருந்தாலும் கிடந்தாலும், நடந்து சென்றாலும், உண்டாலும், உறங்கினாலும், விழித்தாலும், கண் இமைத்தாலும், மன்றாடும் பெருமானின் மலர்ப்பாதங்களை ஒரு போதும் மறவாத மனம் கொண்டவர்களாயிருப்பார்கள்.

அவர்கள் சிவபெருமானுக்கே, ஆளாகிய தவக்கோலத்தை மேற்கொண்டு, சிவநெறியை உலகிற்கு உணர்த்தி, அதனால் ஏற்படும் பயனை உலகம் பெறும்படிச் செய்து, தாமும் பெறுவார்கள். சிவபெருமானுடைய திருவடிகளில் வணங்கி மென்மேலும் பொங்கியெழுகிற சித்தத்துடனே பணிவார்கள். பத்தராய் பணிவார் ஆவார்கள். முப்புரங்களை எரித்தவரும், பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரும், இணையற்ற பரம்பொருளாய் விளங்குபவரும் உலகமனைத்தையும் தமது மாயா சக்தியால் உருவாக்கியவரும், கருவி காரணங்களால் காணப்படாதவராயினும் உலகில் நின்று நிறைந்து காட்டுபவருமாகிய சிவபெருமானையே பாடுபவர்களது பெருமையை  எடுத்துச் சொல்வோம்.

பரமனையே பாடுவார், தமிழ்மொழி, வடமொழி, பிறதேச மொழி இவற்றில் ஏதேனும் பயின்று பிரம்மனும் விஷ்ணுவும் காணப்பெறாத சிவபெருமானையே மெய்ப்பொருளாகக் கொண்டு இயல் இசைப் பாடல்களை மெய்யுணருடன் உள்ளமுருகப் பாடும் மெய்யடியார் ஆவார்கள். ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் பாடுவார்.

(இத்துடன் அடியார்கள் கதை முடிந்தது.  இனி, நாம் திருமால்  பெருமைகளையும் அவன் புராணத்தின் கதைகளையும் கேட்போம்.)