கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 196

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019

டி.ஆர்.மகாலிங்கத்தின் இசைத்தமிழ் சாதனை

 ஏப்­ரல் 21 அன்று பழம்­பெ­ரும் நடி­க­ரும் பாட­க­ரு­மான டி.ஆர். மகா­லிங்­கத்­தின் நினைவு நாள் , அவ­ரைக் குறித்த நினை­வ­லை­களை எழுப்­பி­யது.  பால­கி­ருஷ்­ணன் வேடம் ஏற்று, ‘நந்­த­கு­மார்’ படத்­தில் சிறு­வ­னாக அறி­மு­க­மான டி.ஆர்.மகா­லிங்­கம், 1977 வரை ஒரு நாற்­பது வருட காலம் நாற்­பது படங்­க­ளுக்கு மேல் பாடும் நட்­சத்­தி­ர­மாக தொடர்ந்து நடித்­தார் என்­பது ஒரு சாத­னை­தான்.

பின்­ன­ணிப் பாடல் முறை ஐம்­ப­து­க­ளில் வந்து காலூன்­றி­விட்ட பிற­கும் கூட,   தன்­னு­டைய கடைசி பட­மான ‘ஸ்ரீகி­ருஷ்ண லீலா’ (1977) வரை, தன்­னு­டைய பாடல்­களை தானே பாடி­னார் என்­ப­தும் ஒரு சாத­னை­தான். யாருக்­கும் எட்­டாத ஸ்தாயி­யில் (பிட்­சில்) அநா­யா­ச­மா­கப் பாடு­வது, விறு­வி­றுப்­பான பிரு­காக்­கள் போடு­வது முத­லிய அவ­ரு­டைய முத்­தி­ரை­கள், மகா­லிங்­கத்­தின் பாட்டை குறித்து ஒரு பிர­மிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அவ­ரு­டைய இசை­யின் வீச்சு, இதை வலி­யு­றுத்­திக்­கொண்டே இருந்­தது.

ராக்­கெட்­டின் பாய்ச்­ச­லைப்­போல் உய­ரத்­தா­விய மகா­லிங்­கத்­தின் குர­லும் பிரு­காப்­பா­ணி­யும் ஒரு காலத்­தில்  டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜ­னுக்கு திகைப்பை ஏற்­ப­டுத்­தி­யது உண்டு. இந்த நிலை­யில், ‘‘உன்­னு­டைய குரல் வளத்­தை­யும் கார்வை சுகத்­தை­யும் கொடுத்து உன் பாட்டை நிலை­நி­றுத்து,’’ என்று இசை­ய­மைப்­பா­ளர் ஜி.ராம­நா­தன் தனக்­குத் தைரி­யம் கொடுத்து  பாட­வைத்­தார் என்று தன்­னு­டைய அந்­த­ரங்­க­மான எண்­ணங்­களை என்­னி­டம் டி.எம்.எஸ். பகிர்ந்­து­கொண்­ட­துண்டு. மேற்­படி சம்­ப­வம் நடந்­தது, சிவா­ஜி­யும் பத்­மி­னி­யும் நடித்த ‘ஸ்ரீவள்­ளி’க்கு டி.எம்.எஸ். பின்­ன­ணிப் பாடி­ய­போது.

காலங்­கள் மாறி­ய­போது மகா­லிங்­கத்­தின் பாட்­டுக்கு இருந்த இத்­த­கைய வர­வேற்­பின் வீரி­யம் குறைந்­தா­லும், தமிழ் நாட­க­மே­டை­யின் சங்­கீத சக்­ர­வர்த்­தி­யா­கத் திகழ்ந்த எஸ்.ஜி.கிட்­டப்­பா­வின் சங்­கீ­தப்­பா­ணியை தமிழ்  சினி­மா­வில் உயர்த்­திப் பிடித்­த­வர் என்ற பேரும் புக­ழும் மகா­லிங்­கத்­து­டன் கடைசி வரை இருந்­தன. தமிழ் திரைப்­ப­டங்­க­ளில் நடித்­துக்­கொண்டே,  வி.என். சுந்­த­ரம், கே.பி.சுந்­த­ராம்­பாள் போன்­றோ­ரு­டன் பல ஊர்­க­ளில் ஸ்பெஷல் நாட­கங்­க­ளி­லும் மகா­லிங்­கம் நடித்து வந்­தார். அவர் கால­மான 1978ம் ஆண்­டின் தை, மாசி மாதங்­க­ளில் மலே­ஷி­யா­வில் நாட­கங்­கள் நடத்­தி­விட்டு வந்­தி­ருந்­தார். இந்­தப் பய­ணம் அவ­ரைப் பல­வீ­னப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. மேடை­யில் இசைக் கச்­சே­ரி­க­ளும் செய்­து­வந்த மகா­லிங்­கம், அடுத்த நாள் கோயம்­புத்­தூ­ரில் வழங்­க­வேண்­டிய நிகழ்ச்­சி­யைக் குறித்து சிந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கும் போது, திடீ­ரென்று வந்த மார­டைப்­பால், தன்­னு­டைய சொந்த ஊரான தென்­க­ரை­யில் இறந்­து­போ­னார். அப்­போது அவ­ருக்கு 55 வய­து­கூட ஆகி­யி­ருக்­க­வில்லை. ஆனால், இந்த ஆயுட் காலத்­தில் நாடக உல­கத்­தி­லும் திரை உல­கத்­தி­லும் 45 வருட அனு­ப­வம்!

இயற்கை எழில் சூழ்ந்த தென்­கரை என்­னும் கிரா­மத்­தில் வச­தி­யான ஒரு வேத வித்­த­க­ரின் குடும்­பத்­தில் பிறந்­தார் மகா­லிங்­கம். தந்தை ராம­கி­ருஷ்ண கன­பா­டி­க­ளின்   பாரம்­ப­ரி­யத்தை ஒட்டி, முத­லில் வேத பாட­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். ஆனால் மகா­லிங்­கத்­தின் மனம் வேதம் ஓது­வ­தில்  செல்­ல­வில்லை.

வேதம் வரா­மல் போனா­லும், திண்­ணைப் பள்­ளிக்­கூ­டத்­தில் நான்­கா­வது வரை படித்த மகா­லிங்­கத்­திற்கு நாதம் தானாக வந்­தது.  சோழ­வந்­தான் அருகே இருந்த செல்­லூர் சேஷ அய்­யங்­கா­ரின்  சங்­கீத  கோஷ்­டி­யு­டன் பஜனை மடங்­க­ளி­லும், கோயில்­க­ளி­லும் சிறு­வன் மகா­லிங்­கம் பாடத்­தொ­டங்­கி­னான். பைய­னைப் பாடச் சொல்­லிக்­கேட்டு, உள்­ளூர்­வா­சி­கள் ஆனந்­தம் அடைந்­தார்­கள்.

சிறு­வர்­கள் பங்­கேற்ற பாய்ஸ் கம்­பெ­னி­கள் சக்­கை­போடு போட்ட கால­கட்­டத்­தில், பார்க்க லட்­ச­ண­மா­க­வும் பாடு­வ­தில் சுட்­டித்­த­ன­மா­க­வும் உள்ள பையன்­க­ளுக்­குப் அதிக மவுசு இருந்­தது.

இந்த நிலை­யில், ‘ஒன்­பது ரூபா நோட்டு’ ராமய்­யர் என்­ப­வ­ருக்கு சிறு­வன் மகா­லிங்­கத்­தைப் பற்­றிய செய்தி எட்­டி­விட்­டது. ‘பத்து ரூபாவை மாற்­றி­னால் ஒன்­பது ரூபாய்’ என்று ஒரு நாட­கத்­தில் ஜோக் அடித்­த­தால், கார­ணப்­பெ­யர் பெற்­றி­ருந்த மாஜி நாடக நடி­க­ரான ராமய்­யர், சிறார் குழுக்­க­ளுக்­குப் பையன்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் ஏஜென்ட்­டாக செயல்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தார். கன­பா­டி­க­ளின் எதிர்ப்­பை­யும் மீறி சிறு­வன் மகா­லிங்­கத்தை ஜகன்­னாத அய்­ய­ரின் பிர­பல பாய்ஸ் கம்­பெ­னி­யான பால­மோ­கன கான சபா­வில் சேர்ப்­ப­தில் ராமய்­யர் வெற்றி அடைந்­தார்.  மகா­லிங்­க­மும் அவர் பக்­கம் இருக்­கும் போது தோல்வி என்ற பேச்­சுக்கு இடம் ஏது? இந்த விவ­ரங்­க­ளை­யெல்­லாம் எனக்­குச் சொன்­ன­வர் மகா­லிங்­கத்­தின் இள­வல், டி.ஆர். லட்­சு­ம­ணன்.

பன்­னி­ரண்­டா­வது வய­தில் மகா­லிங்­கம் ஒரு நாட­கத்­தில் பாடி நடித்த போது, பைய­னின் பாட்­டில் மெய்­சி­லிர்த்­துப் போனார் சிறந்த ரசி­க­ரான தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் சத்­தி­ய­மூர்த்தி.  மகா­லிங்­கத்­திற்கு தங்க மோதி­ரம் பரி­ச­ளித்­தார். இந்த அதிர்ஷ்­ட­க­ர­மான அங்­கீ­கா­ரத்­திற்­குப் பிறகு, ஏ.வி.மெய்­யப்ப செட்­டி­யார் தயா­ரித்த ‘நந்­த­கு­மார்’ படத்­தில் (1938), நந்­த­கு­மா­ராக நடிக்­கும் வாய்ப்பு மகா­லிங்­கத்­திற்­குக் கிடைத்­தது.  இப்­படி சுல­ப­மாக மகா­லிங்­கம் சினிமா உல­கத்­தில் நுழைந்த கால­கட்­டத்­தில், நாடக வாய்ப்­பும் போய் சினிமா வாய்ப்­பு­க­ளும் வரா­மல் எம்.ஜி.ஆர். அல்­லா­டிக் கொண்­டி­ருந்­தார். பாடும் திறன் இருந்த நடி­கர்­க­ளுக்கு வாய்ப்­பு­கள் குவிந்த கால­கட்­டத்­தில், மகா­லிங்­கத்­திற்கு சினிமா சான்­சு­கள் அதி­க­ரித்­தன....மாடர்ன் தியேட்­டர்­சின் ‘மனோன்­ம­ணி’­­யில், பி.யு.சின்­னப்­பா­வு­டன் நடித்­தார் மகா­லிங்­கம் (1942). ‘மனோன்­ம­ணி’­­யில் மகா­லிங்­கத்­தின் ஜோடி­யாக நடித்த ஏ.சகுந்­த­லாவை சின்­னப்பா பிறகு காத­லித்து மண­மு­டித்­தார்.

மகா­லிங்­கத்­தின் அடுத்த சிக­ரத்தை மீண்­டும் மெய்­யப்ப  செட்­டி­யார்­தான் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். இளம் நாயகி ருக்­மி­ணி­யு­டன் இளம் நாய­கன் மகா­லிங்­கத்தை இணைத்து, ‘ஸ்ரீவள்ளி’ படத்­தின் வாயி­லாக தனக்கு வசூ­லில் ஜாக்­பாட்­டை­யும் மகா­லிங்­கத்­திற்கு நட்­சத்­திர அந்­தஸ்­தை­யும் சாத்­தி­யம் ஆக்­கி­னார் மெய்­யப்­பச் செட்­டி­யார். மகா­லிங்­கத்­தின் கிட்­டப்பா பாணி பாட்­டும் குரல் வாகும் படத்­தின் வெற்­றிக்கு உத­வின.

 ஏ.வி.எம்­மு­ட­னான வெற்­றி­க­ர­மான தொடர்பு, மகா­லிங்­கத்­திற்கு வெற்­றி­யைக் கொண்­டு­வந்­த­தைப் போலவே ஒரு சங்­க­டத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யது. மகா­லிங்­கம்  ஏ.வி.எம்­மு­டன் கையெ­ழுத்­துப் போட்ட ஒப்­பந்­தத்­தின்­படி, அவர் வேறு தயா­ரிப்­பா­ளர்­க­ளின் படங்­க­ளில் நடித்­தால், அவர் பெறும் சம்­ப­ளத்­தி­லி­ருந்து கணி­ச­மான தொகையை ஏ.வி.எம்.முக்கு செலுத்­த­வேண்­டும் என்ற ஷரத்து இருந்­தது. வெளிப்­ப­டங்­க­ளில் நடித்­த­போது, தான் ஏ.வி.எம்.முக்­குத் தர­வேண்­டிய தொகை­யைக் குறித்து ஒரு சம­ர­ச­மான உடன்­ப­டிக்­கைக்­குப் பிறகு வந்­தார் மகா­லிங்­கம். இந்த விஷ­யங்­களை, இந்த சம்­ப­வம் நடந்த கால­கட்­டத்­தில் மகா­லிங்­கத்­தின் உத­வி­யா­ள­ராக இருந்த எல்.ஐ.சி. ராம­முர்த்தி என்­ப­வர் என்­னி­டம் தெரி­வித்­தார்.

எப்­ப­டி­யும், ஏ.வி.எம்­மின் வெற்­றிப்­ப­ட­மான ‘நாம் இரு­வ’­­ரி­லும் ‘வேதாள உல­க’த்­தி­லும் நடித்­தது, மகா­லிங்­கத்­தின் அந்­தஸ்தை மேலும் உயர்த்­தி­யது. ஜோசப் தளி­யத்­தின் சிட்­டா­டல் ஸ்டூடியோ எடுத்த கிறிஸ்­தவ பட­மான ‘ஞான­ச­வுந்­த­ரி’­­யின்  வெற்றி நாய­க­ராக வலம் வந்­தார் மகா­லிங்­கம். சிட்­டா­ட­லின் ‘இத­ய­கீ­தம்’ (1950) படத்­தில் டி.ஆர். ராஜ­கு­மா­ரி­யைப் பார்த்து மகா­லிங்­கம் பாடிய ‘வானு­லா­வும் தாரை நீ என் இத­ய­கீ­தமே’, இன்­ற­ள­வும் ரச­னை­யோடு கேட்­கப்­ப­டு­கி­றது. பிர­பல மாடர்ன் தியேட்­டர்­சின் ‘ஆதித்­தன் கனவு’, மாடர்ன் தியேட்­டர்­சில் உரு­வான ‘மாயா­வதி’ முத­லிய படங்­க­ளில் நடித்­தார் மகா­லிங்­கம். அவ­ரை­யும், மேற்­ப­டிப் படங்­க­ளின் நாய­கி­யான அஞ்­ச­லி­தே­வி­யை­யும் தொடர்­பு­ப­டுத்தி கிசு­கி­சுக்­கள் சினிமா

பத்­தி­ரி­கை­க­ளில் புழங்­கின. மகா­லிங்­கம் தன்­னு­டைய சொந்­தப்­ப­ட­மான ‘மச்­ச­ரே­கை’­­யி­லும் அஞ்­ச­லி­தே­வியை ஒப்­பந்­தம் செய்­தார். ஆனால் அதற்­குள் சச்­ச­ரவு மூண்டு நட்­சத்­திர ஜோடி பிரிந்­து­விட்­டது. இதன் பிற­கு­தான் எஸ்.வர­லட்­சுமி மகா­லிங்­கத்­து­டன் ‘மச்­ச­ரேகை’, ‘மோக­ன­சுந்­த­ரம்’, ‘சின்­ன­துரை’ போன்ற படங்­க­ளில் தொடர்ந்து ஜோடி சேர்ந்து, கிசு­கிசு இயந்­தி­ரங்­க­ளுக்­குக்

கூடு­தல் தீனி போட்­டார்.

மகா­லிங்­க­மும் எஸ்.வர­லட்­சு­மி­யும் குழந்தை நட்­சத்­தி­ரங்­க­ளாக இருந்து வாலிப நட்­சத்­தி­ரங்­கள் ஆன­வர்­கள். இரு­வ­ரும் 1940லேயே ‘சதி முரளி’ என்ற படத்­தில் சிறு­வர்­க­ளாக இணைந்து நடித்­தி­ருந்­தார்­கள். இரு­வ­ரும் இசை­யில் வல்­ல­வர்­கள். ஆகவே ஜோடிப் பொருத்­தம் கச்­சி­த­மாக இருந்­தது.... ஆனால் ஐம்­ப­து­க­ளின் இடைப்­ப­கு­தி­யில் மகா­லிங்­கம் தோல்­வித் தயா­ரிப்­பா­ள­ராகி மஞ்­சள் கடு­தாசி கொடுத்­துத் தப்­பிக்க  வேண்­டிய நிலைமை வந்த பிறகு, இத்­த­கைய சேர்க்­கை­கள் நிலைக்­க­வில்லை! காசில்­லா­மல் போகும் போது ஒரு தூசு­கூட மதிக்­காது அல்­லவா?

ஆனால் மகா­லிங்­கம் எந்த லட்­சு­மி­யு­டன் இணைந்­தா­லும் எந்த லட்­சு­மி­யைத் துறந்­தா­லும், சங்­கீத லட்­சுமி மட்­டும் அவ­ரைப் பிரி­ய­வே­யில்லை. அத­னால்­தான் ‘தெருப்­பா­ட­கன்’ எடுக்க முயன்று தெரு­விற்கு வந்த மகா­லிங்­கத்தை, திரைப்­பா­டல் எழுதி முன்­னுக்கு வர நினைத்த கண்­ண­தா­சன் தன்­னு­டைய முதல் தயா­ரிப்­பான ‘மாலை­யிட்ட மங்­கை’­­யில் கதா­நா­ய­க­னாக நடிக்க வைத்­தார் (1958).

கண்­ண­தா­சன் தமிழ்த் திரைப்­பா­ட­லுக்கு மாலை­யிட்ட போது, ‘செந்­த­மிழ் தேன்­மொ­ழி­யாள்’ பாட­லின் வாயி­லாக மெல்­லி­சைக்கு மகா­லிங்­கம் தூது­விட்­டார். ‘அபலை அஞ்­சு­கம்’ என்ற படத்­தில், ‘தூண்­டிப்­போட்டு என் மனசு துடிக்­குது’ என்ற பாட­லில், சென்னை தமிழை அழ­கா­கப்­பாடி, கானா பாட்­டுக்­குப் பிள்­ளை­யார் சுழி போட்­டார் மகா­லிங்­கம்.

வெற்­றியை தொடர்ந்து சரிவு, அதன் பிறகு அடுத்த நுழைவு என்று மேடும் பள்­ள­மு­மா­கத் தொடர்ந்த மகா­லிங்­கத்­தின் சினிமா அத்­தி­யா­யத்­தில், ‘மாலை­யிட்ட மங்கை’ தொடங்கி வைத்த அடுத்த ரவுண்டு, ஆட வந்த தெய்­வத்­து­டன்

ஒரு இனி­மை­யான நிறை­வைப் பெற்­ற­தா­கக்

கொள்­ள­லாம்.

அதே போல் மீண்­டும்  ‘திரு­வி­ளை­யா­டல்’ (1965) படத்­தில் பாண­பத்­தி­ர­ராக நடித்து, ‘இசைத்­த­மிழ் நீ செய்த அரும் சாதனை’ என்று ஓங்­கி­நின்­றார் மகா­லிங்­கம். இந்­தச் சுற்­றில், 1972ல் சுமார் ஐம்­பது வயதை அடைந்­தி­ருந்த மகா­லிங்­கம், ‘திரு­நீ­ல­க­ண­டர்’ படத்­தில் பிர­தான வேடத்­தில் சவு­கார் ஜான­கி­யு­டன் நடித்­தார்.

தமிழ் சினி­மா­வின் முதல் சினி­மாஸ்­கோப் பட­மான ‘ராஜ­ரா­ஜ­சோ­ழ’­­னில், கரு­வூர் தேவ­ராக நடித்து, சோழ­னாக நடித்த சிவாஜி அடி எடுத்­துக்­கொ­டுக்க (தென்­ற­லோடு உடன் பிறந்­தாள் செந்­த­மிழ்ப் பெண்­ணாள்), பாடல் இசைத்­தார் மகா­லிங்­கம். தன்­னு­டைய ஆரம்­ப­கால ஜோடி­யான எஸ்.வர­லட்­சு­மி­யு­டன் இணைந்து, ‘தஞ்சை பெரிய கோவில் பல்­லாண்டு வாழ்­கவே’ என்று பாடி­னார்.  இந்­தப் பாட­லில் இணைந்­து­கொண்ட இன்­னொ­ரு­வர், சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன். அவர் ‘ராஜ­ரா­ஜ­சோ­ழன்’ படத்­தில் நம்­பி­யாண்­டர் நம்­பி­யாக நடித்­தார்.

டி.ஆர்.மகா­லிங்­கத்தை ஆதர்ச பாட­க­ரா­கக் கரு­தி­ய­வர் சீர்­காழி. மாடர்ன் தியேட்­டர்­சில் துணை நடி­க­ராக பணி­யாற்­றிய போது  நடிப்­பிற்­கா­கக்­கூட மகா­லிங்­கத்­தின் மீது கல் வீச­மாட்­டேன் என்று கூறி­ய­வர். பின்­னா­ளில், ‘அகத்­தி­யர்’ (1972) படத்­தில் சீர்­காழி கோவிந்­த­ரா­ஜ­னுக்­குத் தலைமை வேடம் கிடைத்­தது. மகா­லிங்­கம் துணைப்­பாத்­தி­ர­ மான நார­த­ராக நடித்­தார். இந்த நிலை­யி­லும், மகா­லிங்­கத்­தின் பெய­ருக்கு மேல் தன் பெயர்

வரு­வதை சீர்­காழி விரும்­ப­வில்லை. பர­வா­யில்லை என்று மகா­லிங்­கம் கூறி­யும் அவர் கேட்­க­வில்லை. கடை­சி­யில் இரு­வர் பெய­ரை­யும் ஒரே வரி­சை­யில் போட்­டார்­கள்!  (டாக்­டர். சீர்­காழி சிவ­சி­தம்­ப­ரம் என்­னி­டம் பகிர்ந்­து­கொண்ட தக­வல்).

 இந்­தச் சம்­ப­வம் சீர்­காழி கோவிந்­த­ரா­ஜ­னின் சிறந்த பண்­பாட்டை காண்­பிக்­கும் வேளை­யில், மகா­லிங்­கத்­தின் பாட்­டுக்கு எவ்­வ­ளவு மரி­யாதை இருந்­தது என்­றும் காட்­டு­கி­றது. அது தொடர்ந்­து­கொண்டே இருக்­கி­றது.

ரீமிக்ஸ் காலங்­கள் வந்­த­போது, தீபன் சக்­ர­வர்த்தி மகா­லிங்­கத்­தின் குர­லில் பாடி தன்­னு­டைய சங்­கீத பலத்­தைக் காட்­டி­னார். டி.ஆர்.மகா­லிங்­கத்­தின் சங்­கீத ஏடு­கள் தொடர்ந்து நமது இசை­யில் இடம்­பெற்­றுக்­கொண்­டு­தான் இருக்­கும்  என்று தோன்­று­கி­றது.  அது இணை­யற்ற நாடக உலக சக்­ர­வர்த்­தி­யான எஸ்.ஜி.கிட்­டப்­பா­வின் பாட்­டி­லி­ருந்து அவர் பெற்ற வரம்.