குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து வருகை

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019 15:11

ரேக்ஜாவிக்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணமாக இன்று ஐஸ்லாந்து நாட்டிற்கு வந்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். 9 நாள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று இரவு, இந்திய தலைநகர் டில்லியில் இருந்து புறப்பட்டு, இன்று ஐஸ்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி சவிதா கோவிந்தும் உடன் வந்துள்ளார்.

பொருளாதார உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பயணத்தில் ஐஸ்லாந்து அதிபர் கியோனி ஜொஹனசன் மற்றும் பிரதமர் காட்ரின் ஜகோப்ஸ்டாட்டிர் ஆகியோரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குடியரசு தலைவர் உரையாற்றவுள்ளார். மேலும், இந்திய தொழிலதிபர்கள் குழுவினரை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவுசெய்யும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வரும் செப்டம்பர் 11ம் தேதி சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு, அந்நாட்டு அதிபர் யுவேலி மவுரர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

இறுதி கட்டமாக வரும் செப்டம்பர் 15ம் தேதி, அங்கிருந்து புறப்பட்டு ஸ்லோவேனியா நாட்டிற்கு செல்கிறார். அங்கு, அந்நாட்டு அதிபர் போரட் பாஹோர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஸ்லோவேனியா நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.