திருப்பதி ஏழுமலையான் சுவாமியை அருகில் நின்று வழிபட சிறப்பு கட்டணம் : தேவஸ்தானம் முடிவு

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2019 17:28

திருமலை,

திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை மிக அருகில் சென்று தரிசனம் செய்ய 20,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலைப்போன்று இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. திருமலை - திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆலயங்களை திருமலை - திருப்பதி தேவஸ்தானமே கட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் சமீபத்தில் பிரமாண்டமான ஏழுமலையான் ஆலயம் கட்டி திறக்கப்பட்டது.

சென்னையிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகப்பெரிய கோயில் கட்ட திட்டமிட்டுள்ளனர். இப்படி கட்டப்படும் ஆலயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மான டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரஸ்ட் பல்வேறு வகைகளிலும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பதியில் வி.ஐ.பி.க்கள் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையானை மிக விரைவில் தரிசனம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு வி.ஐ.பி.க்கும் தலா ரூ.20,000 கட்டணம் வசூலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20,000 ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய வருபவர்கள் திருப்பதி ஏழுமலையானை அருகிலே சென்று தரிசிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மற்ற பக்தர்கள் 3 வழிபாதையில் திரும்பி சென்று விடும் நிலையில் ரூ.20,000 கட்டணம் செலுத்தி வருபவர்களை குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்க ஆலோசித்து வருகிறார்கள். குலசேகர ஆழ்வார்படி வரை சென்றால் திருப்பதி ஏழுமலையானை மிக அருகில் சென்று தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் 20,000 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.