திண்ணை 8–9–19

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

முனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் எழுதிய, 'ம.பொ.சி.,யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்' நுாலிலிருந்து:

ஒரு சமயம், காந்திஜி, கள்ளுண்ணாமையை வலியுறுத்தினார். இதன் முதல் கட்டமாக, கள் விற்கும் கடைகளின் முன் நின்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய கட்டளையிட்டார். வடசென்னையில், இம்மறியலுக்காக அமைக்கப்பட்ட குழுவில், ம.பொ.சி., செயலராக இணைக்கப்பட்டார்.

இவர் எதிர்த்தது, யாரோ முகம் தெரியாத மூன்றாம் மனிதர்களை அல்ல. தன் மொத்த குடும்ப அங்கத்தினரையும்தான்.

கள் அருந்துவதை எதிர்த்ததால், மக்களிடமும், கட்சியிலும் செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், தன் குடும்பத்தினரால், 'குலத்துரோகி' என, குற்றம் சாட்டப்பட்டார்.

இவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர், இவரது ஜாதிக்காரர். ம.பொ.சி., மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதனால், அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார். ஆனால், மறியலில் ஈடுபட்டதால், 'ம.பொ.சி., வாடகை தரவில்லை...' எனக் கூறி, வீட்டை விட்டு வெளியேற்றினார்.

இவர் குடும்பத்தினர், கள் தொழிலை விடாததால், அரசியல் எதிரிகளின் ஏளனத்துக்கு உள்ளானார், ம.பொ.சி.,

ஒரு கட்டத்தில், ஊராருக்காக, தங்கள் தொழிலை விட்டுவிட, வறுமையின் பிடியில் குடும்பம் சிக்கியது. வருமானம் இல்லாமல், தங்கவேல்பிள்ளை சேரி எனுமிடத்தில், பாழடைந்த ஓர் ஓட்டை குடிசையில், தன் குடும்பத்தினருடன் வசிக்க வேண்டி வந்தது. பிறகு, இதுபற்றி வருந்திய, ம.பொ.சி., இப்படி எழுதுகிறார்...

'அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக, அவர்களிடமிருந்து அந்த தொழிலை வேறு நிவாரணம் ஏதும் தராமலே, முற்றிலும் பிரித்து விடுவதென்பது, பரிதாபகரமான விஷயம்தான். திரும்பவும் சொல்கிறேன்... அப்போது, இந்த உண்மை என் மனதில் படவில்லை.

'கொக்குக்கு ஒரே மதி என்பது போல, காங்கிரஸ் கட்டளையை, காந்திஜியின் உபதேசத்தை நிறைவேற்றி வைப்பதையே, என் கடமையாக கருதினேன்.

'அதற்காக, என் குடும்பத்தையோ, குலத்தையோ மறந்து செயலாற்றும் உணர்ச்சி உடையவன் ஆனேன்.

'உயர் கல்வி பயிலாத தொழிலாளியாக இருந்ததால், இதை தவிர, வேறு விதமாக நடந்து கொண்டிருக்க முடியாதல்லவா?'

***

எழுத்தாளர், வாமனன் எழுதிய, 'திரை இசை அலைகள்' நுாலிலிருந்து:

தம் குடும்பத்தில் யாராவது இறந்தால், ரத்த பந்தம் உள்ளவர்கள், அந்திம சடங்குகளை செய்வது வழக்கம்.

ராக பந்தம் உள்ளவர்கள், அந்திம சடங்குகளை செய்த விபரம் தெரியுமா?

பிரபல இசையமைப்பாளர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, தான் உயர்ந்ததுடன், பலரை கை கொடுத்து துாக்கியும் விட்டவர்.

இந்த வகையில், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவால் கண்டு பிடிக்கப்பட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு, பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தார்.

பிற்காலத்தில், பிள்ளை இல்லாத சூழலில், சுப்பையா தம்பதியரை, தன் வீட்டிலேயே தங்க வைத்து, ஆதரித்தார். அத்துடன், சுப்பையா காலமான போது, அவருக்கான அந்திம சடங்குகளையும் செய்தார், எம்.எஸ்.வி.,

இதே போல், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இன்னொரு அபிமானி, கண்ணதாசன்.

அவர் கூறுகிறார்:

‘‘நானும், விஸ்வநாதனும், 4,000 பாடல்கள் வரை இணைந்து பணியாற்றி உள்ளோம். இதற்கு காரணமானவர், எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான். இதனால், 1975ல் நடந்த ஒரு விழாவில், குரு காணிக்கையாக, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு, 'பொற்கிழி' வழங்கினோம்.