சிறுகதை : நல்ல பழக்கம்! – பால் கண்ணன்

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

ஒரேயொரு பாசமான தன் மகனுக்கு பெரிய குடும்பத்தில் பெண்ணெடுக்க முடிவு செய்திருந்தனர் சபாபதியும், சரளாவும். இடைவிடாமல் விதவிதமான எண்ணங்களில் மூழ்கி வருங்கால மருமகள் மகாலட்சுமியாட்டம் இருக்கணும் என்று மூச்சு விடாமல் பேசி உற்சாகம் கொள்வர். அதுமட்டுமல்ல எட்டுத்திசைகளிலும் அவளுக்கு சொந்தபந்தங்கள் மானாவாரியாக நிறைந்து இருக்கணும். ஒவ்வொரு உறவுகளும் சகல வசதிகள் படைத்து நல்ல கவுரவம் நிறைந்தவளாக இருக்கணும் என்று மலைபோல் கனவு கண்டவர்களுக்கு எதிர்பார்த்ததற்கு எதிரா பத்து மடங்கு கூடுதலாக ஒரு வரன் வந்தது.

“என்னங்க... இந்த வரன் ரொம்ப பொருத்தமா இருக்குது. ஒரு பூந்தோட்டத்தில் மத்தியில் உயரமா பூத்து கம்பீரமா உயர்ந்து நிற்கும் பூச்செடி போல அந்த ஊர்ல மதிப்பும், மரியாதையும் உள்ள கவுரமான பெரிய குடும்பமாம். கேட்கக் கேட்க என் காதுல தேன் பாயுறமாதிரி இருந்துச்சுங்க...” என்றாள் மலர்ச்சியுடன்.

“அதை சொல்லேன். என் காதுலேயும் தேன் பாயட்டும்...”

“அந்தப் பொண்ணுக்கு நாலு பெரியப்பா, ஒரு சித்தப்பா அப்புறம் ரெண்டு அத்தைகளாம். கூடப்பிறந்த தம்பியையும் சேர்த்து மொத்தம் ஏழு அண்ணன்களும் நாலு அக்கா, அப்புறம் ரெண்டு தங்கச்சியுமாம். அவளுக்கு முன்னாடி பிறந்த பெரியப்பா பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு. மரத்துல விரியுற கிளைகள் மாதிரி விரிந்து கிடக்கும் குடும்பத்துல ஒற்றுமைன்னா அவ்வளவு ஒற்றுமையாம். எப்போதும் கலகலன்னு இருக்குமாம். வீட்ல சின்ன விசேஷம்னா ஈ மாதிரி மொய்ச்சிடுவாங்களாம். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அன்பாக நடந்துகொள்ளும் விதமே தனி அழகாம்.

 அதுமட்டுமல்ல, யாரு மேலேயும் எந்த குறை இருந்தாலும் முதுகுக்கு பின்னாடி பேசமாட்டாங்களாம். எந்த தப்பு இருந்தாலும் அடுத்த செகண்டே மறந்து போயிடுமாம். யாருக்காவது சின்ன ஆபத்துன்னா மொத்தமா கூடி போட்டிப்போட்டு உதவுறதுல அந்த சொந்தங்கள் மாதிரி இந்த உலகத்திலே வேற எங்கும் கிடையாதுங்க. அந்த ஊரே மூக்குல விரலை வைக்குதுன்னா பார்த்துக்கோங்க. அந்த குடும்பத்துல நாம சம்பந்தம் வச்சுக்கிட்டா நம்ப பையனுக்கும் நல்ல பேரு கிடைக்கும். நமக்கும் மரியாதை இருக்கும்.” சரளா சரசரவென பூ தொடுப்பது போல பேச, மலைத்துப்போய் கேட்டுக்கொண்டிருந்த சபாபதி உள்ளத்தில் பூ வெள்ளம் ஓடியது.

“சரளா... எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்குது. இந்தக் காலத்துல உறவுகள் இப்படி அன்யோன்னியமா இருப்பது என்னால நம்ப முடியவில்லை. குடும்பத்துக்குள்ள உள்ளடி வேலையை நடத்தி ஒற்றுமையை சீர்குலைக்கிற குடும்பங்களைத்தான் நான் பார்த்திருக்கேன். ஒருத்தர் நல்லாயிருந்தா எப்போ ஒடிந்து போவாங்கன்னு காத்திருப்பாங்க. ஆனால் இந்த சொந்தபந்தங்களெல்லாம் கைகோர்த்து தூக்கி விட்டு தானும் நல்லாயிருந்து மற்றவர்களையும் நல்லாயிருக்க உதவி பண்றாங்க. சபாஷ்... நாம கண்டிப்பா அந்த குடும்பத்திலிருந்துதான் சம்பந்தம் வச்சுக்கணும். வா... நாம இப்பவே பொண்ணு வீட்டிற்கு போகலாம்...”

இருவரும் பெண் வீட்டிற்கு சென்றார்கள்.

“உங்க சொந்தபந்தங் களைப்பற்றி எங்களுக்கு நல்லா தெரியும். அத நினைச்சா மிகப்பிரம்மாண்டமான வியப்பு. இப்படியொரு அதிசயங்கள் எங்காவதுதான் இருக்கும். உங்களைப்போல எங்க சொந்தங்களும் ரொம்ப பெரிசு. நாங்களும் ஒற்றுமையாத்தான் இருப்போம். எந்தெந்த இடத்துல எங்க எப்படி முடிச்சுப்போடணும்னு அந்த கடவுளுக்கு நல்லா தெரியும். அவர் போட்ட கணக்கு தப்பாகுமா?” என்று ஒரு நிலையில்லாமல் உணர்ச்சிப் பெருக்க பேச பேச, பெண் வீட்டாருக்கும் மகிழ்ச்சி பொங்கியது.

“ரொம்ப சந்தோஷம். எங்க பொண்ணுக்கும் பெரிய உறவுகள் வட்டம் இருக்கிற இடத்தைதான் பார்த்துக்கிட்டிருந்தோம். நீங்க வந்தது குளம் நிறைஞ்ச மாதிரி இருக்குது. அப்போ சீக்கிரமா ஒரு நல்ல நாளா பார்த்து கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று பெண்ணோட அப்பா அருள்சாமி சொன்னார்.

அடுத்த முகூர்த்தத்தில் இரண்டு நதிகளும் ஒன்றாக கலந்தன.

கல்யாணம் நடந்து ஒரு வாரத்திற்குள் மனைவி வீட்டில் உறவினர்களின் கூட்டத்தில் திக்குமுக்காடிப்போனான் சுந்தர். அவனைசுற்றி அண்ணிகள், கொழுந்தியாக்கள், அத்தான்கள் என்று தேனலையடிக்கிற மாதிரி குறும்பும், கும்மாளத்தில் மிதந்தான்.

“இந்து... இந்த பத்து நாள்ல நான் உன் வீட்டு தரையிலே இல்ல. என்னை தூக்கி வச்சு கொண்டாடிட்டாங்க. நக்கல், நையாண்டி... ஒரே கலகலப்பு. சிரிக்கிற வாய்க்கு ஓய்வே இல்ல. இந்த ஆனந்த கடல்ல கண்டெடுத்த முத்து நீ. நான் உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்கணும். உங்க உறவுக்காரங்க பேச்சுல எந்த கனமான வார்த்தைங்க வரலே. உறவுகள்ன்னா இப்படித்தான் இருக்கணும்...”

அவள் சிரித்தாள்.

“உங்க குடும்பம் எப்படி?”

“எங்க குடும்பத்தைப் பற்றி நான் பெருமையா சொன்னால் நல்லா இருக்காது. இன்னும் ரெண்டு மாதத்துல நீயே தெரிஞ்சுக்குவே...”

“நிச்சயமா உங்க சொந்தபந்தங்களெல்லாம் ஒற்றுமையாத்தான் இருப்பாங்க. ஏன்னா உங்க குணாதிசயங்களை வச்சுத்தான் சொல்றேன்...” அவன் மனதில் ‘திக் திக்’கென்று அடித்துக்கொண்டது.

இரண்டு மாதங்கள் கடந்தன.

இந்து, சுந்தருக்கு மதியம் சமையல் பண்ணி மதிய சாப்பாடு கட்டி கொடுத்து அனுப்பி விட்டு வீட்டு வேலைகளை செய்யும்போது சுந்தரின் பெரியப்பா வந்தார். வீட்டுக்குள் இருந்த சபாபதி வரவேற்றார்.

“அண்ணே... கடையைத் திறக்கலே...?”

“நான் அவசரமா தென்காசிக்கு போறேன். சாயங்காலம்தான் கடையை திறக்கணும். அதற்கு முன்னாடி ஒரு விஷயமாத்தான் உன்கிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு வந்தேன்.”

“சொல்லுண்ணே...”

“நீ பாவூர்சத்திரம் மார்க்கெட்ல காய்கறிகள் வாங்கும்போது எனக்கும் சேர்த்தே வாங்கிட்டு வந்துடேன். மளிகை சாமான் லிஸ்ட் தந்துட்டுப்போறேன். வாங்கிட்டு என் கடை முன்னாடி இறக்கி வெச்சிடு...” சொன்னதும் சபாபதி முகம் லேசாய் கருகியது. அதை வெளிக்காட்டாமல் “ச...ரி...ண்ணே...” என்று மளிகை லிஸ்ட்டையும், பணத்தையும் வாங்கிக்கொண்டார். அவர் போனதும்... இறுக்கமான முகத்தோடு இருந்த சரளா கொதித்தாள்.

“உங்க அண்ணனுக்கு இதே வேலையாப் போச்சு. இப்போ எதுக்கு அவசரமா தென்காசிக்கு போகணும்? தென்காசியிலே மார்க்கெட் இல்லையா? வேலையை முடிச்சிட்டு மளிகை சாமான்களை வாங்கிட்டு வரவேண்டியதுதானே? ரெண்டு பையன்களையும் சென்னைக்கு அனுப்பிட்டு சின்ன சின்ன வேலைகளை உங்க தோள்ல தூக்கி வக்கிறார். இது நல்லாவா இருக்கு?”

“அவன் அப்படித்தான். சொந்த வேலையை என்கிட்ட ஒப்படைச்சிட்டு மத்த வேலையை பார்க்க போயிடுவான். இது அவனுக்கே புரியணும்... தம்பிங்கற பேர்ல வேலைக்காரனா நினைச்சுக்கிட்டு இருக்கான்” என்று எரிச்சலில் புலம்பினார் சபாபதி.

உடனே மருமகளிடம் திரும்பினார் சரளா.

“ஏம்மா நீயே சொல்லு...! உன் பெரிய மாமா நடந்துக்கிட்டது சரியா? இவரோட இரண்டு பையன்களும் சென்னையிலே ஏதோ ஒரு ஜவுளிக்கடையிலே வேலை செய்றாங்க. சம்பளம் போதாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க. நாலு மாசத்துக்கு முன்னாடி இங்கே வந்தவங்க இவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிட்டு போனாங்க. இன்னும் திருப்பித் தர வக்கில்லே. போன் பண்ணி கேட்டா இன்னிக்கு நாளைக்குன்னு இழுக்குறாங்க. சென்னை யிலே கஷ்டப்படுறவங்க இவங்க கடையிலே வந்து வியாபாரத்தை கவனிக்கலாம்ல... நாங்க கனமான வார்த்தையை பேசினால் சண்டை வந்துடும். அதனால பேசாமல் அமைதியா இருக்கோம். நம்ம குடும்பத்திலே நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க. அதாவது...” என்று ஆரம்பித்தவள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழுத்து யார் யார் எப்படிப்பட்டவங்க என்று  அனைத்தையும் ஒன்று விடாமல் குறைகளை அடுக்கி வைத்தாள். கூடவே மாமனார் சபாபதியும் சேர்ந்து கொண்டார்.

பிறந்த இடத்தில் யாரு டைய குறைகளைப் பற்றி யும் தெரிந்து கொள்ளாமல் நல்ல பழக்கத்தில் வளர்ந்த வள், முதல் முதலாக புகுந்த வீட்டுச் சொந்தங்களின் குறைகளை தன்னிடத்தில் திணிப்பதை ஜீரணிக்க முடியாமல் தவித்தாள் இந்து. சூது, பகை. வன்மம், பொறாமை இதெல்லாம் கண்டிராதவள் இங்கே வந்த பின் உணர்ந்தாள்.

‘தங்கள் மீது நியாயம் இருப்பதை பெருமையாக சொல்லும் இவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்களா? இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து அனைவரும் என்கிட்ட பாசத்துடன் நடந்து கொண்டவர்களை குறை கூறுவதா? வந்த ரெண்டு மாசத்திலே இத்தனை அரிய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்ட நான், குறை பட்டவர்கள் என் கண்ணில் பட்டால் என்னால் எப்படி சரியாக பேசமுடியும்? மாமியார் சொன்னதுதானே முன்னாடி நிற்கும்? மோட்டார் போட்டு கிணற்றிலிருந்து வரும் நல்ல தண்ணீரால்தானே பயிர்கள் நல்லா செழித்து வளரும்? அதுவே கழிவுகளையும், விஷங்களையும் கலந்து பாய்ந்தால் பயிர் எப்படி நல்லா வளரும்? இவர்கள் தெளிக்கிற விஷயங்களை வச்சித்தான் நான் இந்த குடும்பத்திலே ஒவ்வொரு உறவுகளிடமும் பழக முடியும். மாமனாருக்கும், மாமியாருக்கும் கட்டுப்பட்டுத்தான் இந்த வீட்ல நடந்துக்க முடியும். கணவரும் அதே மாதிரிதான் இருப்பார். இவர்கள் பேச்சை கேட்கலேன்னா புகுந்த வீடே என்னை துரத்தும்’ என்று புகுந்த வீட்டு கெட்டப் பழக்கத்தை நினைத்து கண் கலங்கினாள்.

இரவு கணவர் சுந்தருடன் அன்பை காட்டுபவள் அன்று கோபமாக இருந்தாள். இதைக் கவனித்த சுந்தர் விஷயத்தை கேட்க, அவள் ஒன்று விடாமல் சொல்லி முடித்ததும் அவன் சிலையாக உட்கார்ந்தான். அவனுக்குள் கூச்சம் பரவியது. ‘பிறந்த வீட்டில் இருக்கற பாசமும், ஒற்றுமையும் இங்கே இல்லை என்பதை எப்படி சொல்வதென்று குழம்பினான்.

உங்க சொந்த பந்தங்கள் போலத்தான் எங்க சொந்த பந்தங்களும் என்று சொன்னதாலேதானே அவர்களும் சம்மதித்தார்கள். இல்லையென்றால் இப்படியொரு சொர்க்கத்தில் வாழ்ந்தவள் எனக்கு மனைவியா அமைஞ்சிருப்பாளா? அனைத்தையும் தெரிந்துக் கொண்ட இவள் நிச்சயம் நாளைக்கு அம்மா வீட்டிற்கு புறப்படுவாள். எல்லாத்தையும் சொல்வாள். நிச்சயம் அவர்கள் மனசு ஏமாந்திட்டோம்னு நினைக்கும். நான் எப்படி அவர்கள் முகத்திலே முழிப்பேன்’ என்கிற பயம் நெஞ்சத்தில் புழுவாய் ஊர்ந்தது.

அவன் பயந்தபடியே மறுநாள் அவள் அம்மா வீட்டிற்கு சென்று அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தியதைபோல் இந்த கல்யாணமும் நடந்திடுச்சுன்னு வேதனை நெஞ்சைப் பிசைந்தது.

“அம்மா... ஆரம்பத்திலே என்னை பதமா பேசுனவங்க இப்போ வதமா நடந்துக்கிறாங்க. பேச்சும் செயலும் அதட்டல் தொனியில் இருக்குது. தண்ணீர்ல நனைந்த பஞ்சு போல என் மனசு அழுத்தமா இருக்குதும்மா... வீட்ல விசேஷம் இருந்தால் மட்டும் ஒற்றுமையா இருக்காங்க. மற்ற நேரம் முதுகுக்கு பின்னாடி பேசுற ரகம். ஒருத்தரைப்பற்றி ஒருத்தர் குறை குறையா சொல்லும் போது என்னால அங்க நிம்மதியா இருக்க முடியலேம்மா. அந்த வீட்ல நல்ல பழக்கமே இல்லேம்மா...”

“சரி... அதுக்கொரு வழி பண்றேன். உடனே உன் கணவரை போன் போட்டு வரச்சொல். அடுத்தகட்டத்தைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.”

சாயங்காலம் சுந்தர் வந்தான்.

“மாப்ளே... என் பொண்ணை நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்த்தோம். ஆனால் உங்க வீட்டு பழக்கத்தை எங்க பிள்ளைக்கும் கத்துக்கொடுத்தால் பிற்காலத்திலே இவளுக்கு இருக்கிற நல்ல பழக்கங்களெல்லாம் நழுவிப் போயிடும். பின்னே எதற்கெடுத்தாலும் வீட்டுக்கு வர்றவங்களை குற்றம் சொல்லிக்கிட்டே இருப்பாள்.”

“அத்தே... எப்பேர்ப்பட்ட குடும்பத்திலே நான் மருமகனாயிருப்பது எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது. ஆனால் நீங்க ஏமாற்றமடைந்ததை நினைத்து ரொம்ப வெட்கப்படுறேன். இனிமேல் எந்த தவறும் நடக்காது. உங்க பொண்ணு இனிமேல் எங்க குடும்பத்தைப் பற்றி எந்தக் குறையும் சொல்லமாட்டாள். நல்ல பழக்கத்திற்கு கற்றுத் தருமளவுக்கு நான் என் பெற்றோரை மாற்றப்போறேன்” என்று அவன் சொன்னதில் உறுதி இருந்தது.

ஒரு வாரம் கடந்திருக்கும். பக்கத்து தெருவில் வாடகைக்கு ஒரு வீடும் பார்த்து அதன் முன்னாடி மளிகைக்கடை போட ஏற்பாடு நடந்தது. இதையறிந்த சபாபதியும், சரளாவும் ஓடோடி வந்தனர்.

“உனக்கென்ன பைத்தியமா? ஏண்டா தனிக்குடித்தனம் போேற?” அம்மா கேட்க, எல்லா விஷயங்களையும் சொன்னான் சுந்தர். அவன் சொல்ற விஷயங்கள் நியாயமானதாக இருப்பதை நினைத்து கூனி குறுகினார்கள்.

“இங்க பாருப்பா... ஏதோ தெரியாத்தனமா ஒரு ஆவேசத்திலே உளறிட்டேன். நாங்க நடந்து கொண்ட விதம் முட்டாள் தனம்தான். மகாலட்சுமியாட்டம் வந்தவளிடம் சில குடும்பங்களைப் பற்றி அநியாயமா சொல்லி உன் பொண்டாட்டி மனசை அழுக்காக்கிட்டேன். ஒரு மாமியாரா இருக்கிறதை விட்டுட்டு ‘ராமாயண’த்திலே வரும் குடும்பத்தை பிரிக்கிற கூனி மாதிரி நடந்துக்கிட்டேன்.

புது மருமகளுக்கு ஒவ்வொரு கற்பித்தலும் விதை மாதிரி. அந்த கற்பித்தலுக்கேற்ப தான் விதை மரமாகும். அந்த மரம் பிறருக்கு நன்மை பயக்கணும். பிறருக்கு தீமையா இருந்தால் உறவுகள் கையில் கோடாலிகளைத்தான் காண முடியும். எங்களை மன்னிச்சிருப்பா. பிறந்த வீட்டில் நல்ல பழக்கத்தோடு வளர்ந்தவளை இந்த வீட்லயும் நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுக்கிறேன். இனிமேல் நல்லதையே பேசுறேன். நம்ம வீட்டைப் பார்த்து மற்ற சொந்தங்களையும் மாற்றி காட்டுறேன்ப்பா. தயவு செய்து தனிக்குடித்தனம் போகாதே...” என்று  கண்ணீர் விட்டு அழுத அம்மாவை சுந்தர்  ஆறுதல்படுத்தி இந்துவை பார்த்து சிரிக்க, அவளும் சிரித்துக்கொண்டே மாமியார் கன்னத்தில் வடிந்த கண்ணீரை துடைத்தாள்.

***