மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 7

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

வாலி ஏன் மறுத்­தார்?

சொந்­தம்ங்­கி­ற­து­னால எனக்கு நீங்க வாய்ப்­புத் தர­வேண்­டாம். என் திற­மை­யைப் பாத்து கொடுத்தா போதும்’ என்று சொன்­னார் வாலி.  1963 ஜன­வரி மாதம்  முதல் வாரத்­தில் ஒரு மத்­தி­யான வேளை­யில், முக்தா பிலிம்ஸ் மாடி­யி­லுள்ள  சின்ன அறை­யில் எம்.எஸ். விஸ்­வ­நா­த­னுக்­கும், ராம­மூர்த்­திக்­கும் வாலி அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டார்.  வாலி ஏற்­க­னவே, எம்.ஜி.ஆர்., படத்­தி­லும்,  எஸ்.எஸ். ஆர்., படத்­தி­லும் பாடல்­கள் எழு­தி­யி­ருப்­ப­தை­யெல்­லாம் விஸ்­வ­நா­த­னி­டம் விவ­ரித்­துச் சொன்­னார் முக்தா சீனி­வா­சன்.

`நல்ல கவி­ஞன், பாட்­டைப் பாருங்­கள். பிடித்­தி­ருந்­தால் ஏற்­றுக் கொள்­ளுங்­கள். ஒத்­து­வ­ராது என்று தோன்­றி­னால் நான் உங்­களை வற்­பு­றுத்த மாட்­டேன்’ என்­றெல்­லாம், தெளி­வாக எடுத்­துச் சொன்­னார் முக்தா.

விஸ்­வ­நா­தன் வாலி­யைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி வாலிக்கு சற்று அதிர்ச்­சியை அளித்­தது.

`நீங்க பிரா­மினா?’ என்­றார்.

`ஆம்’ என்று வாலி சொல்லி முடிப்­ப­தற்­குள் ` எங்­க­ளுக்கு உற­வுக்­கா­ரப் பையன்’ என்­றார் முக்தா சீனி­வா­சன்.

விஸ்­வ­நா­தன் ஜாதிக் கண்­ணோட்­டம் இல்­லா­த­வர். பாப­நா­சம் சிவனை தலைக்கு மேல் வைத்­துக் கொண்­டா­டு­ப­வர் என்­ப­தெல்­லாம் வாலிக்­குத் தெரி­யும்.  அத­னால் தனது சாதி­யைப் பற்றி, தன்­னிச்­சை­யா­கத் தெரிந்து கொள்ள விரும்­பி­யி­ருக்­கி­றார் என்­பதை வாலி புரிந்து கொண்­டார்.

`ஏதா­வது பல்­ல­வியை எழு­திக் காட்­டுங்­கள்’ என்­றார் விஸ்­வ­நா­தன். பாட்­டுக்­கான காட்சி விளக்­கத்தை முக்தா சீனி­வா­சன் சொன்­னார்.  உடனே வாலி ஒரு பல்­ல­வியை எழுதி விஸ்­வ­நா­த­னி­டம் நீட்­டி­னார்.

`பூவ­ரை­யும் பூவைக்கு பூமாலை போடவா?

 பொன்­ம­களே வாழ்­க­வென்று பாமாலை பாடவா?  என்­ப­து­தான் அந்­தப் பல்­லவி. `பூவைக்கு’ என்­ப­தெல்­லாம் டியூ­னுக்கு சரி­யாக வராதே’ என்­றார் எம்.எஸ்.வி.

 உடனே `பூங்­கொ­டியே’ என்று மாற்­றிக் கொடுத்­தார் வாலி.

 வாலி எழு­திக் கொடுத்த பல்­ல­விக்கு ஐந்தே நிமி­டங்­க­ளில் – ஐந்து வித­மாக மெட்­ட­மைத்­துப் பாடி­யதை கேட்டு வாலி அசந்து போனார்.

`சர­ணத்­திற்கு, நான் கொடுக்­கும் மெட்­டுக்­குத்­தான் நீங்­கள் பாட்டு எழு­த­வேண்­டும்  என்று சொல்­லி­விட்டு சர­ணத்­திற்­கான மெட்டை வாசித்­தார் விஸ்­வ­நா­தன்.

 சர­ணங்­களை வாங்­கி­ய­வர், அவற்­றைப் பாடா­மல் திரும்ப திரும்ப இரண்டு முறை படித்­துப் பார்த்­தார் விஸ்­வ­நா­தான்.

 பிறகு வாலி­யைப் பார்த்து கேட்­டார்.

` இவ்­வ­ளவு நாளா எங்கே இருந்­தீங்க ?’ என்­ப­து­தான் அந்­தக் கேள்வி.

 வாலி கண்­க­லங்கி மவு­னம் ஆனார்.

 சர­ணங்­களை உடனே ` மள­மள’ வென்று பாடி­னார்.

 ` சீனு அண்ணே, அடுத்த சிச்­சு­வே­ஷ­னை­யும், இவர்­கிட்ட சொல்­லுங்க’ என்­றார் விஸ்­வ­நா­தன்.

 சொன்­னார் சீனி­வா­சன்.

 உடனே வாலி எழு­தி­னார்.

‘ஒடி­வது போல் இடை­யி­ருக்­கும்

 இருக்­கட்­டுமே

 அது ஒய்­யார நடை நடக்­கும்

 நடக்­கட்­டுமே

 சுடு­வது போல் கண் சிவக்­கும்

 சிவக்­கட்­டுமே

 கண் சுட்­டு­விட்­டால் கவி பிறக்­கும்

 பிறக்­கட்­டுமே’

விஸ்­வ­நா­தன், மகிழ்ந்து, நெகிழ்ந்­தும் போனார். உடனே வித­வி­த­மான மெட்­ட­மைத்­துப் பாடிக் காட்­டி­னார். வழக்­கம் போல், அவர் கொடுத்த மெட்­டுக்கு வாலி சர­ணங்­களை எழுதி முடித்­தார்.  பிற்­ப­கல்  மூன்று மணி­யி­லி­ருந்து நாலரை மணிக்­குள் இரண்டு பாடல்­கள் நிறை­வ­டைந்­தன.

 விஸ்­வ­நா­தன் அடுத்த கம்­ப­னிக்­குப் புறப்­பட்டு விட்­டார். போகும்­போது,  முக்தா சீனி­வா­சனை தனி­யாக அழைத்­துக் காதில் ஏதோ சொல்­லி­விட்­டுப் போனார்.

`என்ன சொன்­னாரோ?’ என்று வாலி பதை­ப­தைப்­போடு சீனி­ வா­ச­னைக் கேட்­டார்.

`உன்னை வைத்தே மிச்­சப் பாடல்­க­ளை­யும் எழு­த­லாம் என்று சொல்­லி­விட்­டுப் போன­ரய்யா. இன்­னி­யோடு உன் தரித்­தி­ரம் விடிந்­தது’ என்­றார் முக்தா.

 வாலிக்கு நா எழ­வில்லை. கண்­க­ளில் நீர் கோத்து விழிப்­ப­ட­லம் மறைக்க நின்­றார். முக்தா சீனி­வா­சன் என் கண்­முன்னே எனக்கு கட­வு­ளா­கவே காட்­சி­ய­ளித்­தார். வறு­மை­யில் வாடி, நித்­தம் நித்­தம் செத்­துக் கொண்­டி­ருந்த வாலிக்கு வாழ்­வுப் பிச்­சைப் போட்ட முக்தா சீனி­வா­சனை வாலி மூச்­சுள்ள வரை மறக்­க­வில்லை.

 பிறகு வாலி பல ஆயி­ரம் பாடல்­கள் எழு­தி­யி­ருக்­க­லாம். ஆனால் இதற்­கெல்­லாம் மூலக்­கா­ர­ணம் முக்­தா­தான்.

முக்­தா­வைப் பற்றி வாலி ஒரு கவிதை எழு­தி­யி­ருக்­கி­றார்.

‘முக்தா என்­னும்

 முழு மனி­தனே

 நீ –  சுப்­ர­பா­தம் கேட்­டுத்

 துயில் நீங்­கும்

 ஸ்ரீனி­வா­ச­னல்ல;

 சுப்­ர­பா­தம் பாடி

 என்­னைத் துயி­லெ­ழுப்­பிய

 ஸ்ரீனி­வா­சன்

 நீ  பள்ளி யாசி­ரி­யர்க்­குப்

 பிள்­ளை­யாய் பிறந்­த­தால்

 தந்­தை­யின் தொழி­லைத்

 தொடர்ந்து செய்­கி­றாய்

 ஆம்!

 அவர் கற்­றுத் தந்­தது

 படிப்பு

 நீ கற்­றுத் தரு­வது

 நடிப்பு

 செல்­லம்­மாள்

 உன்னை ஈன்­ற­தால்

 நல்­லம்­மாள் ஆனாள்

 நீ

 நெருப்பு மூட்­டும்­வரை

அந்­தக் கருப்பை உள்­ளம்

 கவு­ர­விக்­கப்­பட்­டது

 அத­னால்­தான்

 பட்­டம் பெறாத உன்னை

 ஒரு பட்­ட­தாரி

 மணந்து கொண்­டாள்.

 கட்­சி­யைக் கொண்டு

 காசு சேர்க்­காத

 கண்­ணி­ய­வான் நீ

 உன்­னைக்

 கத­ரா­டை­யில் உல­வும்

 சிகப்­புக்

 காம­ரா­சன் என­லாம்

 அத­னால்­தான்

 மூப்­ப­னார் கூடத்

 தன் தோப்­ப­னார் போல்

 உன் அன்பை

அங்­கீ­க­ரிக்­கி­றார்.

 நீ முத­லா­ளியை

 முன்­னுக்கு கொண்டு

 வந்த தொழி­லாளி

 உன்­னால்­தான்

 இந்­தத் தொழி­லாளி

 இன்று முத­லா­ளி­யா­னான்.

 நான்

 உன்­னி­டம்

 அட்­ச­ரப் பாத்­தி­ரம்

 ஏந்தி வந்­தேன்

 அதில்  அன்­ன­மிட்ட

 அட்­ச­யப் பாத்­தி­ரம் நீ

 உன்  அண்­ணன்

 ராம­சாமி

 இந்த வாலியை

 அம்புகொண்டு

 வீழ்த்­தி­ய­வ­னல்ல

 அன்பு கொண்டு

 வாழ்த்­தி­ய­வன்

 எங்­க­ளுக்­குத்­தான்

 நீ

 சீனி­வா­சன்

 ஆனால்

 ராம­சா­மிக்கு

 நீ

 இலக்­கு­வன்

 தம்­பி­யு­டை­யான்

 படைக்­கஞ்­சான்

 எனும்  தமிழ் மொழி

 உன்­னால்

 சத்­தி­ய­மா­யிற்று.

 சத்­தி­யத்­தைக்

 கடைப்­பி­டித்­த­தால்­தான்

 வெற்றி உனக்கு

 சாத்­தி­ய­மா­யிற்று

 உன்னை  ஒரு கவி­தைக்­குள்

அடக்­கு­வது  எனக்­குக்

 கஷ்­ட­மான காரி­யம்.

 இருப்­பி­னும்

 அது­தான் எனக்கு

 இஷ்­ட­மான  காரி­யம்

 கார­ணம்

 என்  இத­யத்­தில் நீ!’

அவ்­வை­யா­ரின் பாடல் ஒன்று இவ்­வாறு சொல்­கி­றது–

 ‘ஆலைப் பலா­வாக்க லாமோ ? அருஞ்­சு­ணங்­கள்

 வாலை நிமிர்த்த வச­மாமோ ?’

 இய­லாத காரி­யம்­தான். இருப்­பி­னும் இறை­வன் திரு­வுள்­ளம் அவ்­வா­றி­ருப்­பின், ஆலும் பலா­வா­கும்; அருஞ்­சு­ணங்­கள் வாலும் நிமிர்ந்து நிற்­கும். மனித யத்­த­னத்­தில் எது­சாத்­தி­ய­மில்லை என்று கரு­தப் பட­டு­கி­றதோ அது தெய்வ யத்­த­னத்­தில் இமைக்­கும் நேரத்­தில் ஈடே­றி­வி­டு­கி­றது.

வாசிக்க வைக்­க­வும், மனி­தனை யோசிக்க வைக்­க­வும் எத்­து­ணையோ அற­நூல்­கள் இருக்­கின்­றன. ஆனால், வாசிக்­கும் புத்­த­கங்­க­ளைக் காட்­டி­லும் வியத்­தகு உண்­மை­ களை வாழ்க்கை போதித்து விடு­கி­றது. ஒரு புத்­த­னை­யும் சித்­த­னை­யும் கற்­று­ண­ரா­மலே, பட்­ட­றி­வைக் கொண்டு நாம் பல்­வேறு நன்மை தீமை ­க­ளைப் பகுத்த­றி­ய­லாம், காலம் கற்­பிப்­பதை கணக்கு வாத்­தி­யார் கற்­பிப்­ப­தில்லை.

(தொட­ரும்)