சென்னையில் 'அத்திவரதர் விநாயகர்' சிலை: மக்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2019 15:55

சென்னை

சென்னை, புரசைவாக்கத்தில் அத்திவரதர் போல விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் கடந்த 2 மாதங்களாக அத்திவரதர் சுவாமி தரிசன வைபவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் மட்டுமே இந்த வைபவம் நடைபெறுவதால், நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளித்தார்.

அத்திவரதரைப் பின்பற்றி சென்னை, புரசைவாக்கத்தில் அத்திவரதர் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து ஏராளமான மக்கள், வரிசையில் நின்று அத்திவரதர் விநாயகரைத் தரிசித்து வருகின்றனர்.

அத்திவரதர் விநாயகர் சிலையை வடிவமைத்த நபர் கூறும்போது,

இங்குள்ள ஏராளமான மக்களால் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரைத் தரிசனம் செய்ய முடியவில்லை. அதைக் கருத்தில் கொண்டுதான் அத்திவரதரைப் போல 9 அடியில் விநாயகரை வடிவமைத்தோம். இந்த விநாயகர், சயன கோலத்தில் 3 நாட்களும் (புதன் வரை), நின்ற கோலத்தில் 3 நாட்களும் (சனிக்கிழமை வரை) காட்சியளிப்பார். அதுவரை மக்கள் அத்திவரதர் விநாயகரைத் தரிசனம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.