இன்று விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்: சோனியா, ராகுல்காந்தி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2019 10:43

சென்னை,

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. 

விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு..

சோனியா, ராகுல் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், 

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 

நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.