ஹைதராபாத்தில் 61 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை

பதிவு செய்த நாள் : 01 செப்டம்பர் 2019 16:59

ஹைதராபாத்,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 61 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரமான விநாயகர் சிலையாக இது கருதப்படுகிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் விநாயகர் கோவிலில் 61 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரமான விநாயகர் சிலையாக இது கருதப்படுகிறது.

துவாதசி ஆதித்ய மஹா கணபதி அவதாரத்தில் இந்த விநாயகர் சிலை அமைந்திருப்பதாகக் கூறுகிறார் கணேஷ் உத்சவா கமிட்டியின் தலைவர் சிங்காரி சுதர்ஷன் முதிராஜ். 61 அடி உயர விநாயகர் சிலை குறித்து அவர் கூறுகையில், 

இந்த விநாயகரை வழிபடுவதன் மூலம் நல்ல மழை பொழியும் என்பது ஐதீகம்.

கடந்த 1954-ல் 1 அடி விநாயகர் சிலையுடன் இந்த மண்டபம் எனது சகோதரரும் சுதந்திர போராட்ட வீரருமான எஸ். சங்கரைய்யாயாவால் துவங்கப்பட்டது. அன்று முதல் சிறிது சிறிதாக சிலையின் உயரம் வளர்ந்துகொண்டே வந்தது. 2014-ல் 60 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இந்தாண்டு 61 அடிக்கு உயர்த்தியுள்ளோம்  என்றார்.

பன்னிரு தெய்வங்களின் திருமுகங்களும், ஆயுதங்களைத் தாங்கிய 24 கைகளும் ஏழு குதிரைகள் கொண்ட தேரும் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலப் பகுதிகளைச் சேர்ந்த 150 கலைஞர்களின் உழைப்பில், ரூ. 1 கோடி செலவில் 4 மாதங்களில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 2-ஆம் தேதி மதியம் தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் முன்னிலையில் வழிபாடு துவங்கயிருக்கிறது.