தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு துவங்கியது

பதிவு செய்த நாள் : 01 செப்டம்பர் 2019 10:57

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று துவங்கியது.

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் அடங்கிய 6, 491 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தன்னுடைய இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 

இதற்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது. தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. 

தமிழகத்தில் 301 தாலுகாக்களில் 3,000 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். அதாவது ஒரு பதவிக்கு 251 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்வுகளில் காப்பி அடிப்பதை தடுக்க கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.