திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2019 13:35

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை துவங்கியது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கியது.

இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளினார். 

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.