உலக பாரா பாட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

பதிவு செய்த நாள் : 28 ஆகஸ்ட் 2019 18:42

புதுடில்லி,

உலக பாரா பாட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 பதக்கங்கள் வென்ற இந்திய அணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.ஸ்விட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஊனமுற்றவர்களுக்கான பாரா பாட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய பாரா பாட்மிட்டன் அணி - 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றது.

மொத்தம் 21 நாடுகள் பங்கேற்ற இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா மற்றும் இந்தோனேசியாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா மூன்றாவது இடத்தை கைப்பற்றியது

இந்நிலையில் பாரா பாட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘‘இந்திய பாரா பாட்மிட்டன் அணியை நினைத்து 130 கோடி இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள். அணியை சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். உங்களது சாதனை மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது. அணியில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரும் வீராங்கனையும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டுள்ளனர்’’ என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.