உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

பதிவு செய்த நாள் : 27 ஆகஸ்ட் 2019 14:58

புதுடில்லி,

பாட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரது வாழ்த்துக்களைப் பெற்றார்.

இந்திய பாட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஞாயிற்றுக்கிழமை ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜப்பானின் ஒகுஹாரவை 21 - 7, 21 - 7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து முதல்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். பாட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பி.வி. சிந்து பெற்றார்.

சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இன்று இந்தியா திரும்பிய பி.வி.சிந்துவுக்கு டில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பி.வி சிந்து அவரிடம் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றார்.

‘‘உலக பாட்மிண்டன் சாம்பியன் பி.வி. சிந்து. தங்கப்பதக்கத்துடன் நாட்டுக்கு பல பெருமைகளையும் சேர்த்துள்ளார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது சிறந்த எதிர்காலத்துக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்’’ என பி.வி சிந்துவுடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார்.

பிரதமருடனான சந்திப்பின் போது பி.வி.சிந்துவின் பயிற்சியாளரும் பாட்மிண்டன் வீரருமான கோபிசந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, பி.வி. சிந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பி.வி சிந்துவிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார் அமைச்சர் ரிஜிஜூ.