உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து

பதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 18:51

பசேல்,             

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பசேல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பேவு-ஐ வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில், இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. தரவரிசையில் 5வது இடம் வகிக்கும் 24 வயதான சிந்து, இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனும், 4ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் இன்று மோதினார்.

இதில் துவக்கம் முதல் சிந்துவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதன் முதல் செட்டை 21-7 என கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் ஆதிக்கத்தை தொடர்ந்த சிந்து 21-7 என மிகச்சுலபமாக தன்வசப்படுத்தினார். முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2017, 2018ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களிலும் தோற்று வெள்ளிப்பதக்கத்தை மட்டுமே பெற்ற சிந்து, பேட்மிண்டன் வரலாற்றில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்றுள்ளார்.

2017ம் ஆண்டு உலக பேட்மிண்டன் இறுதி சுற்றில் இதே ஒகுஹராவிடம் தான் சிந்து தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.