கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 193

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2019

ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் – 3

‘மேகங்­கள் இருண்டு வந்­தால், அதை

மழை எனச்­சொல்­வ­துண்டு

மனி­தர்­கள் திருந்தி வந்­தால், அதைப்

பிழை எனக்­கொள்­வ­துண்டோ?’ என்று ‘நான் ஆணை­யிட்­டால்’ படத்­தில் இடம் பெற்ற அரு­மை­யான பாட­லுக்கு, மிகச்­சி­றந்த தொகை­யறா அமைந்­தது, அதற்­குக் கூடு­தல் சிறப்பு தந்­தது.

தொகை­யறா அல்­லது விருத்­தம் என்­பது பாட­லின் தொடக்­கத்­தில் வரும் தாளத்­திற்கு உட்­ப­டாத வரி­கள். அவை தாளக்­கட்டு இல்­லா­மல் பாடப்­ப­டும் வரி­கள்.

குற்ற வாழ்க்­கை­யி­லி­ருந்து திருந்­திய ஒரு­வன், திருந்­தாத மற்­ற­வ­ரை­யும் திருந்­தும்­படி வலி­யு­றுத்­தும் ஒரு­வன், தனக்கு நன்­மை­யில்­லா­மல் போனா­லும் பிறர் நன்மை அடை­ய­வேண்­டும் என்று நினைக்­கும் அள­வுக்கு உயர்ந்த எண்­ணம் கொண்ட ஒரு­வன்.... இப்­ப­டிப்­பட்ட ஒரு­வன் மங்­கல நிகழ்ச்­சி­யின் இடை­யில் வலிய கைது செய்­யப்­ப­டு­கி­றான், சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றான்.

இந்த நிலை­யில், சத்­தி­யம், தர்­மம், வாய்மை என்­றெல்­லாம் நாம் கூறு­கி­றோமே, அந்­தத் தத்­து­வத்­திற்கு சாரம் இருந்­தால், அது ஓடி வந்து இந்­தக் குற்­ற­மற்­ற­வ­னைக் காத்­தி­ருக்­க­வேண்­டாமா?

காத்­தி­ருக்­கு­மாம், ஆனால் ஒரு சங்­கதி.  அது  ஓடி­வ­ர­மு­டி­யா­மல் செய்­து­விட்­ட­தாம்!

‘ஓடி வந்து மீட்­ப­தற்கு உண்­மைக்கோ

கால்­கள் இல்லை!’ (இப்­ப­டித் தொடங்­கு­கி­றது தொகை­யறா).

நீதித்­துறை, சட்­டம் ஒழுங்கு  என்­றெல்­லாம் பேசு­கி­றோமே, அது ஒரு அப்­பா­வியை சிறை­யில் அடைக்­கும் முன்பு, சரி­யாக விசா­ரித்­து­விட்டு

ஒரு முடி­வுக்கு வராதோ என்­றால்,

‘ஓய்ந்­தி­ருந்து கேட்­ப­தற்கு நீதிக்கோ நேர­மில்லை!’

சரி, சத்­தி­யத்­திற்கு கால் இல்லை, சட்­டத்­திற்கு அவ­கா­சம் இல்லை....இந்த உல­கத்­தைப் படைத்து எல்லா இடத்­தி­லே­யும் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிற பக­வான் இருக்­கானே, அவன் ‘இது­தான் நடந்­தது, இவன் களங்­கம் அற்­ற­வன்’ என்று சாட்சி சொல்­லக்­கூ­டாதோ என்­றால்,

‘பார்த்த நிலை சொல்­வ­தற்கு பர­ம­னுக்கோ உரு­வம் இல்லை....!’

ஆகவே, கதை­யின் இந்­தத் திருப்­பத்­தில், குற்­ற­மற்ற இவ­னும்,

‘பழி சுமந்து செல்­வ­தன்று, இவ­னுக்கோ பாதை­யில்லை!’

குற்­ற­மற்ற நாய­கன் நீதிக்­குப்­பு­றம்­பாக சிறை­வா­சம் ஏற்­க­வேண்டி வரும் திருப்­பத்­தில், ஆலங்­குடி சோமு எழு­திய இந்த வரி­களை விட சிறப்­பான ஒரு ‘பில்ட் அப்’ கொடுக்க முடி­யுமா என்­றால், முடி­யாது என்­று­தான் கூற­வேண்­டும்!

‘ராமா­ய­ண’த்­தில், அடுத்த நாள்  முடி­சூட்டு விழா என்று அறி­விக்­கப்­பட்டு, காலை­யில் மன்­னனை சந்­திக்க ராம­பி­ரான் செல்­கி­றார். கைகே­யி­யின் அழிச்­சாட்­டி­யத்­தால் ‘வனத்­திற்­குப் போ’ என்ற ஆணை­யைப் பெறு­கி­றார். இந்த நிலை­யில் ராம­பி­ரான் வெளியே வந்து, கோச­லை­யி­டம் விடை­பெற்­றுச்­செல்ல நடக்­கி­றார்.

இந்­தக் காட்­சியை கம்­ப­நா­டர்,

‘குழைக்­கின்ற கவரி இன்றி

கொற்ற வெண் குடை­யும் இன்றி

இழைக்­கின்ற விதி முன் செல்ல

தரு­மம் பின் இறங்கி ஏக...’, ராமர் நடந்­தார் என்­கி­றார்.

ராம­பி­ரான் தொடர்­பான தன்­னி­கர் இல்­லாத இந்த காவிய வரி­களை நினை­பு­ப­டுத்­தும் வண்­ணம் அமைந்­தன, பின்­னா­ளைய மரு­தூர் ராமச்­சந்­தி­ர­னுக்­காக ‘நான் ஆணை­யிட்­டால்’ படத்­தில் அமைக்­கப்­பட்ட வரி­கள்.

‘பல்­லாண்டு வாழ்க’ படத்­தில், எம்.ஜி.ஆர். ஒரு சீர்த்­தி­ருத்த சிறை அதி­காரி. ஜெயி­லர் ராஜன். ஆனால் சாதா­ரண சிறை அதி­காரி அல்ல. வேதனை, சோதனை ஆகி­ய­வற்றை சந்­தித்து மீண்டு வந்­தால்­தான் சாதனை செய்ய முடி­யும் என்று உணர்ந்­த­வர். மிகக் கொடூ­ர­மான ஆறு

குற்­ற­வா­ளி­க­ளைத் சிறை­யி­லி­ருந்து விடு­வித்து, அவர்­க­ளைத் தன்­னு­டைய விடு­தலை நக­ரத்­தின் வாசி­கள் ஆக்­கு­கி­றார். கத்தி முனை­யில் நடப்­பது போன்ற இந்த பரி­சோ­த­னை­யின் ஒரு கடி­ன­மான திருப்­பத்­தில், மேல­தி­கா­ரி­யின் ஆணை­யால் அவரே கூட சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றார்!  

எம்.ஜி.ஆர். மிக­வும் மதித்த சாந்­தா­ரா­மின் ‘தோ ஆங்­கேன் பாரா ஹாத்’ (‘இரண்டு கண்­கள்’, ‘பன்­னி­ரண்டு கரங்­கள்’) என்ற படத்­தைத் தழு­வித்­தான் ‘பல்­லாண்டு வாழ்க’ எடுக்­கப்­பட்­டது. ஆனால்

தன்­னு­டைய தேவைக்கு ஏற்ப தமிழ்ப் பிர­தியை எம்.ஜி.ஆர். வெகு­வாக மாற்­றிக் கொண்­டார்.  

இந்­திப் படத்­தில் நாய­க­னுக்­குக் காதல் ஜோடி கிடை­யாது. ‘பல்­லாண்டு வாழ்க’  படத்­தில்

எம்.ஜி.ஆர். -லதா காதல், இன்­ப­ர­சப்­பா­டல்­க­ளில் கொடி­கட்­டிப் பறக்­கி­றது. அது மட்­டு­மல்­லா­மல், ‘பல்­லாண்டு வாழ்­க’­­­வில் அர­சி­யல் பிர­சா­ரம் அதி­கம் இருந்­தது.

ஒரு கட்­டத்­தில், எம்.ஜி.ஆரு­டைய கைதி­கள் தப்­பித்­துக்­கொள்ள ஓடும் போது, அவர்­க­ளின் வழி­யில் அண்ணா சிலை ஒன்று காணப்­ப­டு­கி­றது. அவர்­கள் அப்­ப­டியே நின்­று­வி­டு­கி­றார்­கள்...ஏனென்­றால் அந்த சிலை­யின் விழி­க­ளில் எம்.ஜி.ஆரின் விழி­களை அவர்­கள் காண்­கி­றார்­கள்!

இத­னால், மகு­டிக்­குக் கட்­டுப்­பட்ட நாகங்­கள் போல் அவர்­கள் திரும்­பி­வி­டு­கி­றார்­கள்! சாந்­தா­ராம் முன் வைத்த ‘இரண்டு கண்­கள்’ என்­ப­தற்கு ‘பல்­லாண்டு வாழ்க’ இத்­த­கைய ஒரு அர­சி­யல் பரி­மா­ணம் தந்­தது !

படத்­த­லைப்­பி­லேயே கைதி என்று எம்.ஜி.ஆர். குறிப்­பி­டப்­ப­டு­கிற படம், 1952ல் வந்த ‘அந்­த­மான் கைதி’. கு.சா. கிருஷ்­ண­மூர்த்­தி­யின் பிர­பல மேடை­ நா­ட­கத்­தின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட இந்­தப் படத்­தில், இந்­திய பிரி­வி­னைக்கு முந்­தைய காலத்­தில் கராச்சி நக­ரத்­தில் வாழும் இளை­ஞர்

நட­ரா­ஜ­னாக எம்.ஜி.ஆர். சித்­த­ரிக்­கப்­ப­டு­கி­றார்.

நட­ரா­ஜ­னின் தந்தை ‘கராச்சி’ சிதம்­ப­ரம் பிள்ளை, அந்த நக­ரத்­தில் வர்த்­த­கம் செய்­து­கொண்­டி­ருப்­ப­வர். மனை­வி­யின் பேச்­சைக் கேட்டு, திருச்­சி­யில் சொத்­துக்­கள் வாங்­கும் பொருட்டு தன்­னு­டைய மைத்­து­னர்  திவான் பக­தூர் பொன்­னம்­ப­லம் பிள்­ளை­யி­டம் (கே.சாரங்­க­பாணி) லட்­சக்­க­ணக்­கா­கப் பணம் அனுப்­பு­கி­றார். அவற்­றை­யெல்­லாம்

கப­ளி­க­ரம் செய்­து­விட்டு, பணத்­தைத் திருப்­பிக்­

கேட்க வந்த மைத்­து­ன­ரைக் கொலை செய்­து­வி­டு­கி­றார் திவான் பக­தூர்!  

இந்த நிலை­யில்,  கராச்­சி­யில் வகுப்­புக் கல­வ­ரங்­கள் வெடித்­த­தும், தாயு­ட­னும் தங்­கை­யு­ட­னும் திருச்சி திரும்­பு­கி­றான் நட­ரா­ஜன். ஆனால் அங்கே தாய்­மா­மன் இழைக்­கும் அநீ­தி­கள், அநி­யா­யங்­கள் கார­ண­மா­கக் கடை­சி­யில் அவ­ரைக் கொலை செய்ய நேர்­கி­றது.  அந்­த­மான் சிறை­யில் ஆயுள் தண்­ட­னைக் கிடைக்­கி­றது!

‘அந்­த­மான் கைதி’ திரைப்­ப­டம், அந்­த­மான் சிறை காட்­சி­க­ளு­டன் தொடங்­கு­கி­றது. நட­ரா­ஜ­னும் (எம்.ஜி.ஆர்) ஒரு வய­து­மு­திர்ந்­த­வ­ரும் விடு­விக்­கப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் கப்­ப­லில் திரும்­பும் போது, நட­ரா­ஜன் தன்­னு­டைய கதை­யைப் பெரி­ய­வ­ரி­டம் கூறு­கி­றான். பிளாஷ்­பேக் கதை­யா­கத்­தான் ‘அந்­த­மான் கைதி’ வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. குடும்­பத்­தில் எஞ்­சி­ய­வர்­கள் ஒன்­று­சே­ரும் கடைசி காட்சி, நிகழ்­கா­லத்­திற்­குத் திரும்­பு­கி­றது.

இந்­திய சுதந்­தி­ரப் போராட்­டத்­தின் முற்­ப­கு­தி­யில், எண்­ணற்ற விடு­தலை வீரர்­கள் சித்­ர­வ­தைக்கு  ஆளாக்­கப்­பட்ட ஒரு கொடூ­ர­மான காராக்­கி­ர­கம், அந்­த­மான் சிறை. ரத்­தத்தை உறைய வைக்­கும் வன்­மு­றை­கள் கைதி­கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட இந்த சிறைக்­கூ­டத்­தில், சாவர்க்­கர் போன்ற போராட்­டக்­கா­ரர்­கள் சிறை­வைக்­கப்  

பட்­டார்­கள். இந்­தக் கால­கட்­டத்­தில் வெள்­ளை­யர் ஆட்சி கைதி­களை நடத்­திய விதங்­கள், ‘சிறைச்­சாலை’ (1996) என்ற படத்­தில் சித்­த­ரிக்­கப்­பட்­டி­ ருக்­கின்­றன. மலை­யா­ளத்­தில் ‘காலா பானி’ என்ற பெய­ரில் எடுக்­கப்­பட்ட இந்­தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி­க­ளில் ‘டப்’

செய்­யப்­பட்­டது.    இந்­தப் படத்­தில்­கூட சில சரித்­தி­ரப்­பி­ழை­கள் இருப்­ப­தாக சில விமர்­ச­கர்­கள் முணு­மு­ணுத்­தார்­கள்.

ஆனால் நமது ‘அந்­த­மான கைதி’­­­யின் அந்­த­மான் சிறை தொடர்பே கேள்­விக்கு உரி­ய­தா­கப்­ப­டு­கி­றது. படக்­கதை நடப்­ப­தா­கக் காட்­டப்­ப­டும்

இந்­தியா சுதந்­தி­ரம் அடை­யப்­போ­கும் கால­கட்­டத்­தில், அந்­த­மான் சிறைக்கு  குற்­ற­வா­ளி­கள் அனுப்­பப்­பட்­ட­தா­கத் தோன்­ற­வில்லை.

‘அந்­த­மான கைதி’ படத்­தின் நீதி­மன்ற காட்­சி­யில், நாய­கன் நட­ரா­ஜ­னுக்கு எதி­ராக அவ­னு­டைய தாய்­மா­மன் ஜோடித்த வழக்­கில், அவ­ரி­டம் லஞ்­சம் வாங்­கிக்­கொண்டு நட­ரா­ஜனை உள்ளே தள்ள

உத­வி­ய­தாக ஒரு போலீஸ் இன்ஸ்­பெக்­டர் ஐந்து வருட சிறை தண்­ட­னைப் பெறு­கி­றார்.

இந்­தக் காட்­சி­யைப் பார்க்­கும் போது, எம்.ஜி.ஆருக்­குப் பதி­னாறு வரு­டங்­க­ளுக்கு முன், தான் நடித்த முதல் பட­மான ‘சதி லீலா­வ­தி’­­­யில் தன்­னு­டைய வேடம் நினை­வில் வந்­தி­ருக்­கக்

­கூ­டும்.

‘சதி லீலா­வ­தி’­­­யில் எம்.ஜி.ஆர். ஏற்­றது, இன்ஸ்­பெக்­டர் ரங்­கையா நாயுடு என்ற வேடம். இந்­தக் காவல் அதி­காரி, வில்­ல­னு­டன் கூட்­டுச் சேர்ந்து, பட நாய­க­னைக் கொலை­கா­ர­னாக வழக்­கில்

முன்­னி­றுத்­து­கி­ற­வர். நீதி­மன்­றத்­தில் உண்­மை­கள் வெளியே வரும் போது, ரங்­கையா நாயுடு குற்­ற­வா­ளி­க­ளு­டன் கூட்­டுச்­சேர்ந்­தி­ருப்­பது ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்டு, அவ­ருக்­கும் தண்­ட­னைக் கிடைக்­கி­றது.  இது­தான் எம்.ஜி.ஆருக்கு  அவ­ரு­டைய முதல் படத்­தில் கிடைத்த வேடம்.

‘சதி லீலா­வதி’ வந்த நான்­கைந்து வரு­டங்­க­ளுக்­குப் பிறகு, எம்.ஜி.ஆர். திரை­யில் சிறை­பு­கும் காட்சி, ‘அசோக்­கு­மார்‘ படத்­தில் வரு­கி­றது.

இந்­தப் படத்­தில், மாற்­றாந்­தா­யின் காமுக வலைக்கு உட்­ப­டாத நாய­கன் குணா­ளன் (தியா­க­ராஜ பாக­வ­தர்), அவ­ளால் அபாண்­ட­மா­கக் குற்­றம் சாட்­டப்­பட்டு, சிறை­யில் தள்­ளப்­ப­டு­கி­றான்.­

அது மட்­டு­மல்­லா­மல் அவ­னு­டைய கண்­கள்

பறிக்­கப்­பட வேண்­டும் என்ற கட்­ட­ளை­யும் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

இந்த ஆணையை நிறை­வேற்­றும் பொறுப்பு மகேந்­தி­ரன் என்ற வீர­னுக்­குத் தரப்­ப­டு­கி­றது.

எம்.ஜி.ஆர். ஏற்ற இந்த வேடத்­தில், சிறைப்­பட்­டி ­ருக்­கும் இள­வ­ர­ச­னின் விழி­களை, தீயில் காய்ச்­சப்­பட்ட ஈட்­டி­க­ளுக்கு இரை­யாக்க வேண்­டிய தர்­ம­சங்­க­ட­மான காரி­யத்தை சிறைக்­கூ­டத்­திற்­குச் சென்று அவர் நிறை­வேற்­று­கி­றார்.

திரை­யில், எம்.ஜி.ஆரின் சிறை­கள் இந்த நிலை­யில் இருக்­கின்­றன என்­றால், சிவா­ஜியை நினைக்­கும் போது, மன­தில் பல­வித சிறைக்­கூ­டங்­க­ளும் அவற்­றில் நடை­பெற்ற காட்­சி­க­ளும் நினை­வில் சுழல்­கின்­றன.

அவற்­றில், முன்னே நிற்­பவை இரண்டு காட்­சி­கள்...ஒன்று சிறைக்­கூ­டத்­திற்கு உள்­ளேயே நடை­பெ­று­கி­றது... இன்­னொன்று சிறை­யின் வாயி­லிலே நடை­பெ­று­கி­றது... இரண்­டும் நெஞ்சை உருக்­கும் வண்­ணம் அமைந்த மறக்க முடி­யாத காட்­சி­கள்.

 (தொட­ரும்)