செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 125 – சுதாங்கன்

பதிவு செய்த நாள்

07
மே 2016
22:46

1968ம் ஆண்டு வந்த முதல் சிவாஜி படம் ‘ திருமால் பெருமை’தான்! ஆனால், அந்த படத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும்!  அதனால் அந்த வருடம் வந்த படங்களை வரிசைப்படுத்தாமல் எழுதுகிறேன்! 

காரணம், அந்த வருடம்தான் என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் மகுடத்தில் வைத்த இன்னொரு சில வைரக் கற்கள் உருவாகின! பல வித்தியாசமான திரைப்படங்களும் வந்தன!  அந்த வருடம் வந்த படங்கள் எனக்குள் சிவாஜியைப் பற்றி பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றன!

அத்தனை வித்தியாசமான படங்கள்! இப்படி ஒரு நடிகன் ஒரே வருடத்தில் இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா?  உலகத்தில் எந்த நடிகனாவது இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஒரே வருடத்தில் நடித்திருக்கிறானா? ஏன் இவனது சாதனையைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள்? 

காரணம், இந்த கலைஞன் கலையோடு மட்டுமே வாழ்ந்துவிட்டான்!  அந்த வருடம் வந்த படம்தான் ‘உயர்ந்த மனிதன்’! இது ஏவி.எம். தயாரிப்பு! இதில் பணக்கார இள, நடுத்தர, வயோதிக வேடம்! முதலில் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்! பிறகு திருத்தி அமைக்கப்பட்ட கதைக்குத்தான் உடன்பட்டார் அவர்!

இந்தப் படத்திற்கான திரைக்கதை – வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார்! சிவாஜி ஒரு பணக்கார வீட்டு பிள்ளை! அவருடைய தந்தை எஸ்.வி. ராமதாஸ்!

சிவாஜி ஓர் ஏழைப்பெண்ணைக் காதலிப்பார்! அவளோடு உறவும் கொண்டு விடுவார்! அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவள் தனியே தந்தையுடன் வீட்டில் இருக்கும் போது சிவாஜியின் தந்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்!

குழந்தை என்ன ஆனது? குழந்தை பிழைக்கும். தாய் இறந்து போவாள்! வருடங்கள் கடக்கும்! சிவாஜி இப்போது ஒரு நடுத்தர மிகப்பெரிய தொழிலதிபர்!

அவருடைய மனைவி சவுகார் ஜானகி! திருமணமாகி வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை! இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது!  இந்த சம்பவத்தை எனக்குச் சொன்னவர் சவுகார் ஜானகி! இந்தப் படத்தின் முக்கால்வாசி பகுதி முடிந்துவிட்டது!

அப்போது திடீரென்று ஏவி.எம்மில் ஒரு தொழிலாளர் போராட்டம்! ஸ்டூடியோ மூடப்பட்டுவிட்டது! இந்த இடைப்பட்ட காலத்தில் சிவாஜிக்கும், சவுகாருக்குமிடையே ஒரு பொதுமேடையில் வைத்து கருத்து வேறுபாடு!

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு! சிவாஜி-– சவுகார் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக நடிக்க உடன்படவில்லை! இருவரையும் சம்மதித்து நடிக்க வைத்தனர்! நடிப்பில் மட்டும்தான் இருவருக்கும் பேச்சுவார்த்தை!’ படப்பிடிப்பில் ஒரு‘ஹலோ’ கூட கிடையாது! மீண்டும் ஒரு வருடம் கழித்து படப்பிடிப்பு!

ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சியின் தொடர்ச்சி!  அதாவது முதல் வருடம் சவுகார் உள்ளே வருவது மாதிரி காட்சி! இப்போது அவர் உள்ளே வந்து கூடத்தில் வந்து உட்கார வேண்டும்! சிவாஜிக்கும் சவுகாருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது!

திடீரென்று அதற்கு முந்தைய வருடம் படப்பிடிப்பு பாதியில் நின்றதால், தொடர்ச்சி காட்சிக்கான புகைப்படங்கள் அதாவது ஸ்டில்ஸ் எடுக்கப்படவில்லை! இப்போது சவுகார் உள்ளே உடையோடு படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் வருகிறார்! சிவாஜி ஏற்கனவே தயார் நிலையில்! சவுகார் வந்த உடையை கண்டதும் சிவாஜி முகத்தில் ஒரு கலவரம்! அதை சவுகாரிடம் சொல்ல முடியாது!

காரணம், இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது! இருவருக்கும் தூது, உதவி இயக்குநர்கள்தான்! சிவாஜி உதவி இயக்குநரை அழைத்தார்! ‘அந்தம்மாவின் உடை சரியில்லை! போன முறை ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த காட்சியில் அவர் கறுப்பு சேலை அணிந்திருந்தார். இப்போது சேலை நிறம் மாறியிருக்கிறது’ என்றார் சிவாஜி! இதை உதவி இயக்குநர்கள் சவுகாரிடம் போய் சொன்னார்கள்!

சவுகார் படித்தவர்! தனக்கென ஒரு கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வைத்துக்கொண்டிருக்கும் குணாதிசயம் கொண்டவர்!

‘அதெல்லாம் கிடையாது! படம் நின்னு போய் ஒரு வருடம் ஆச்சு! இதே புடவையைத்தான் நான் கட்டியிருந்தேன். இந்த ஒரு வருடம் அவர் நடுவில் எத்தனை படங்கள் நடித்திருப்பார். வேறு படத்தின் நினைவில் சொல்கிறார்! வேணும்னா கண்டினியூடி அதாவது தொடர்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துப் பாருங்கள்’ என்றார்  சவுகார்!

‘மேடம்! ஸ்டில்ஸ் எடுக்கிறதுக்குள்ள தான் படப்பிடிப்பு நின்னு போச்சே!’

‘அப்ப என்னால புடவையை மாத்த முடியாது–’ இது சவுகார்!

சிவாஜியிடம் போய் சொன்னார்கள் உதவியாளர்கள். அந்தப் படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு! இவர்கள்தான் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தை இயக்கியவர்கள்!

சிவாஜி தன் குருநாத இயக்குநர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, ‘வேண்டுமானால் நீங்கள் ‘ரஷ்’ போட்டு பாருங்கள். நான் சொல்வது சரியில்லையென்றால் நான் நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! வேறு வழியில்லாமல் ‘ரஷ்’ பார்க்க முன்பார்க்கும் ( பிரிவியூ) திரையரங்கும் தயாரானது!

படம் பார்க்க சிவாஜி – சவுகாரை அழைத்தார்கள்! சிவாஜி வர மறுத்துவிட்டார்! சொன்ன காரணம் ‘எனக்கு சந்தேகமில்லை!  தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் பார்க்கட்டும்’ என்று சொல்லி தன் ஒப்பனை அறைக்குப் போய் விட்டார்! படத்தை பார்த்தார்கள்! சவுகாரும் பார்த்தார்! பார்த்த மாத்திரத்தில் அந்த அரங்கை விட்டு வெளியே ஓடினார் சிவாஜி இருந்த ஒப்பனை அறையை நோக்கி,

அப்போது இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையில்லாத சமயம்! நேராக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் சவுகார்! கண்ணீர் மல்க சிவாஜி எதிரே ஒரு வினாடி நின்று அப்படியே காலில் விழுந்தார்!

‘எப்படிங்க இது! ஒரு வருடத்திற்கு முன்னாடி நின்னு போன படம்!

நடுவிலே எத்தனை படம் நடிச்சிருப்பீங்க! எப்படி நான் இந்தக் காட்சியில நடிச்ச புடவை நிறம் கூட நினைவில் வெச்சிருக்கீங்க!! நீங்க அபாரம்! என்ன கோபமிருந்தாலும் மன்னிச்சுக்குங்க’ என்றார் சவுகார்.

அவரை கைதூக்கிவிட்டபடி சிவாஜி சொன்னார்! ‘என் சுபாவம், கவனம் எல்லாமே நடிப்புத்தானேம்மா! இந்தப்படத்துக்கு வந்தால் இந்த கதாபாத்திரம்! அடுத்த படப்பிடிப்புக்கு போய் மேக்கப் போட்டால், அடுத்த கதாபாத்திரம்! இதுதானே என் பழக்கம்?’ என்றார் சிவாஜி!

சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பும், அதை புரிந்து கொண்ட சவுகாரும் பழைய தற்காலிக கோபத்தை மறந்தார்கள். அதுதான் அந்த காலத்து நட்சத்திரங்களின் தொழில் அர்ப்பணிப்பு! அந்த காலத்தவர்களுக்கும் பணம் தேவைதான்! ஆனால் அதையும் மீறி ஒரு தொழில் அர்ப்பணிப்பு இருந்தது!

 (தொடரும்)