ஆடி கருட சேவைக்காக நாளை மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம்: கலெக்டர் தகவல்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 16:15

சென்னை,

அத்திவரதர் தரிசனம் நாளை மாலை 5 மணியுடன் நிறுத்தப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 31 நாட்களாக சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார்.

அத்திவரதர் பெருவிழாவின் 45-வது நாளான இன்று பன்னீர் ரோஜா நிறத்தில் நீல சரிகை பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்து, பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.

ஆதி அத்திவரதரைக் காண இன்றுடன் மூன்று நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 44 நாட்களில் 90 லட்சம் பக்தர்கள் தரிசித்துச் சென்றனர்.

இந்நிலையில், நாளை ஆடி கருடசேவை நடைபெற உள்ளதால் மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படுகிறது. 

அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான ஆகஸ்ட் 16-ம் தேதியன்று காலை 5 மணி முதல் அத்திவரதர் தரிசனம் மீண்டும் துவங்கப்படும்.

கடைசி நாட்களான 16 மற்றும் 17ம் தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் கிடையாது, ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும்

அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்த பிறகே அத்திவரதர் தரிசனம் முழுமையாக நிறைவடையும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.