![]() | ![]() | ![]() |
இன்றைய நிலையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் இருப்பது சிறு தொழில்முனைவோர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். ஆன்லைனில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் சிறு தொழில்முனைவோர்கள் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
1. வலைதளம் அவசியம்!
ஒவ்வொரு சிறு தொழில் முனைவோருக்கும் மிக அவசியம் ஒரு வலைதளம். அவர்களின் நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு வலைதளத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் அனைத்து விதமான விவரங்களையும் அப்லோடு செய்யவேண்டியது அவசியம். ஒருமுறை அப்லோடு செய்வதுடன் நில்லாமல், அடிக்கடி புதுப்புது விஷயங்களை வலைதளம் மூலம் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பதும் அவசியம்.
வலைதளத்தை உருவாக்குவதில்தான் இன்றைய தொழில் முனைவோர்களுக்கு சவாலாக இருக்கிறது. இந்த வேலையை வலைதளத்தை உருவாக்கித் தரும் நிறுவனங்களிடம் தந்தால் அவர்களே தயார் செய்து தந்து விடுவார்கள். இதற்கு சில ஆயிரம் ரூபாய் செலவாகும். அதன்பிறகு அது சார்ந்த டெக்னிக்கல் அறிவை வளர்த்துக்கொண்டு குறைந்தபட்சம் வாரம் இருமுறையாவது வலைதளத்தை அப்டேட் செய்வது அவசியம்.
வலைதளம் இருந்தால்தான்
ஆன்லைனில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தொழில்முனைவோர் தயாரிக்கும் பொருட்களின் மீதும் நம்பிக்கை ஏற்படும். இதனால் வியாபாரமும் சூடு பிடிக்கும். வலைதளத்தில் உள்நுழையும் வாடிக்கையாளர்களிடம் மெயில் முகவரிகளைப் பெறும் ஆப்ஷனை வைத்திருப்பது கட்டாயம்.
2 .நியூஸ்லெட்டர் அனுப்புங்கள்!
ஆன்லைனைப் பொறுத்த வரை, எடுத்தவுடன் மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. தங்களின் பிசினஸ் சார்ந்த, பொருட்கள் சார்ந்த விவரங்களை நியூஸ் லெட்டராகத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வாரம் ஒருமுறை அனுப்புவது அவசியம். இது வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதுடன், அவர்கள் தொடர்ந்து நாம் தயாரிக்கும் பொருட்களின் மீது நாட்டத்துடன் இருக்க உதவும்.
இந்த நியூஸ்லெட்டரில் அவர்களுக்கு என்ன மாதிரியான தகவல்கள் தேவை என்பதையும் கேட்டு, அதையும் சேர்த்து அனுப்புவது சாலச் சிறந்தது. உதாரணத்துக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கான ஹோமியோபதி மருந்துகளை விற்கும் நிறுவனம் என்றால், அந்த மருந்து குறித்த விவரங்களை மட்டுமே அனுப்பாமல், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்படிக் கட்டுப்பாடாக இருப்பது,என்ன சாப்பிட வேண்டும் என்பது போன்ற தகவல்களை நியூஸ் லெட்டராக அனுப்புவது அவசியம்.இது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
3. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துங்கள்!
ஆப்லைனில் இருக்கும் கடைகளுக்கு என்னதான் விளம்பரம் செய்தாலும், வாடிக்கையாளர்களின் வாய்வழி மூலமாகக் கிடைக்கும் விளம்பரமே சிறந்தது என்பார்கள். அதுபோல, இன்றைய நிலையில் சமூக வலைதளங்கள் அந்த வேலையைச் செய்கின்றன. தொழில்முனைவோர்கள் தங்களின் எழுத்துப் புலமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், நிறுவனம் குறித்த விவரங்களை, பொருட்கள் குறித்த விவரங்களைச் சமூக வலைதளங்களில் எழுதி அதைப் பரப்பலாம். இன்றைய நிலையில் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் மற்றும் யூ-டியூப் போன்றவை மக்களிடம் பிரபலமாக இருக்கின்றன. எழுத்தின் மூலம் மட்டுமே மார்க்கெட் செய்யாமல், பொருட்கள் குறித்துத் தாங்களே பேசிய வீடியோ பதிவைகூடச் சமூக வலைதளங்களில் பதிவு செய்யலாம். பல வீடியோக்கள் இப்படித்தான் வைரலாகிகொண்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களில் எழுதும்போது குறைவான வார்த்தைகளில் வாடிக்கையாளர்களுக்குப் புரியவைப்பது நல்லது. முடிந்தால் ஒரே படத்தில் நீங்கள் சொல்ல வந்ததை அவர்களுக்குப் புரியவைத்தால் இன்னும் உத்தமம். அதேபோல, வீடியோ பதிவுகளும் அதிகபட்சம் 3 நிமிஷம் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு பர்னிச்சர்களை விற்பவர், அந்த பர்னிச்சர் குறித்தும், அது தயாரிக்கப்பட்ட முறைகள் குறித்தும் சுவாரஸ்யமாகப் பேசி, வீடியோ எடுத்து அதை அப்லோடு செய்யலாம்.
4. துறை சார்ந்த குழுக்கள்!
ஆன்லைனில் துறை சார்ந்து குழுக்களும், அமைப்புகளும் இயங்கி வருகின்றன. இதில் பலபேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதில் இணைந்து கொண்டு, அவ்வப்போது தங்கள் நிறுவனத்தின் பெயரை முன்நிறுத்துங்கள். உங்களின் தயாரிப்பு குறித்து அங்குக் கலந்துரையாடுங்கள். இது வியாபார வட்டத்தை ஆன்லைனில் விரிவுபடுத்த பேருதவி செய்யும். அதுமட்டும் இல்லாமல், தங்களின் துறை சார்ந்த மூத்த முன்னோடிகள் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள். அவர்கள் பெற்ற அனுபவங்களைச் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை பாலோ செய்வதுகூட ஆன்லைனில் வியாபாரத்தை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.
உதாரணத்துக்கு, டெக்ஸ்டைல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒரு நபரை கண்டுபிடித்து, அவரது வழிகாட்டுதலில் வெற்றியைத் தேடிக்கொள்ளலாம். அவர் அவ்வப்போது அவரது வலைதளத்தில், பேஸ்புக் பக்கத்தில் ஆடைகள் குறித்து, மக்களிடம் வரவேற்பிருக்கும் புதுமையான மாடல்கள் குறித்தெல்லாம் பதிவு செய்தால், அதை பாலோ செய்வது அவசியம். சாதகமான விஷயங்களுடன் பாதகமான விஷயங்களையும் அவர் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
5. கூகுள் அலெர்ட்ஸ், ஆன்லைன் டைரக்ட்ரி!
வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக, தங்களின் துறை சார்ந்த தகவல்களை வாரி வழங்க வேண்டுமாயின், தங்களுக்கு அது சார்ந்த தகவல்கள் ஆன்லைன் வாயிலாக அல்லது பிறர் வாயிலாகக் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்போதுள்ள கூகுள் மிகவும் ஸ்மார்ட்டாக வேலை செய்கிறதென்பதால், அதிலுள்ள கூகுள் அலெர்ட்ஸ் பக்கத்துக்குச் சென்று, தங்களுக்குத் தேவையான விஷயங்களை, உதாரணமாக, சர்க்கரை வியாதி தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றால் என்று பதிவு செய்து தங்களின் மெயில் முகவரியை தந்துவிட்டால்,அவ்வப்போது கூகுள் தங்களின் மெயில் முகவரிக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் பெறும் அறிவை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். அதேபோல, பல நிறுவனங்கள் ஆன்லைன் டைரக்ட்ரியில், நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நிறுவனத்தின் தொடர்பு விவரங்களை இலவசமாகப் பதிவு செய்யும் வாய்ப்பை வழங்கு கின்றன. இதில் பதிவு செய்வதன் மூலம் வியாபார வாய்ப்புகளைப் பெருக்கலாம்” என்றார் .
சிறு தொழில்முனைவோர்கள்
இதை பாலோ செய்யலாமே!