அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை கைவிடப்பட்டது: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 14:14

மதுரை,

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை, பொதுத்துறை தரப்பில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

காரணம் ஏன் கூறவில்லை?

அறிக்கையில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 26-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.