தமிழகத்தை சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 13:18

 புதுடில்லி,

தமிழகத்தை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான குடியரசு தலைவர் விருதும் மேலும் மெச்சத் தக்க சேவை ஆற்றிய  21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்புத்துறை, துணை ராணுவ படை ஆகியவற்றில் சிறப்பாக, துணிச்சலான சேவை புரிந்தவர்களுக்கான குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையை சேர்ந்த 946 அதிகாரிகள், தீயணைப்புத்துறையை சேர்ந்த 56 அதிகாரிகள், துணை ராணுவப்படையை சேர்ந்த 44 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

காவல்துறையில் துணிச்சலாக பணியாற்றிய 3 அதிகாரிகளுக்கு அவர்களின் மறைவுக்கு பின் குடியரசு தலைவர் விருது வழங்கப்படுகிறது.

அவர்களில் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட இமிதியாஸ் அகமது. மற்ற 2 பேர் மறைந்த சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களான லோக்ராக்பம் இபோம்சா சிங் மற்றும் முகமது மொஜஹித் கான் ஆவர்.

துணிச்சலான சேவை புரிந்ததற்கான பதக்கம் 177 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

தமிழக அதிகாரிகளுக்கான விருதுகள் 

காவல்துறை

காவல்துறையில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கான குடியரசு தலைவர் விருது  89 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஏடிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் கோயம்பத்தூர் போலீஸ் தேர்வு பள்ளியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கே. சபரிநாதன் ஆகியோர் குடியரசு தலைவர் விருதை பெறுகிறார்கள்.

இவர்களை தவிர மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

தீயணைப்புத்துறை

தேசியளவில் தீயணைப்புத்துறையில் துணிச்சலாக சேவையாற்றியதற்கான விருதை தமிழகத்தை சேர்ந்த உமாபதி தண்டபாணி பெறுகிறார். 2019ம் ஆண்டுக்கான இந்த விருதை பெறும் ஒரே நபர் என்ற பெருமையை உமாபதி தண்டபானி பெற்றுள்ளார்.

தீயணைப்புத்துறையில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய 47 அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த திராவிடமணி பழனி, சுப்பிரமணியன் ராமகிருஷ்ணன், ஜானகிராமன் மோகனம் மற்றும் ராஜு ஆறுமுகம் ஆகிய 4 பேர் இந்த விருதை பெறுகிறார்கள்.

துணை ராணுவப்படை

தேசிய அளவில் துணை ராணுவப் பிரிவில் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்த 36 வீரர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரன் ஸ்ரீகிருஷ்ணபெருமாள், ஜெயசந்திரன் பத்மநாபன் வன்பாக்கம் மற்றும் கஸ்தூரி லக்ஷ்மனசாமி ஆகிய 3 பேருக்கும் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

காவல்துறையினருக்கான பதக்கப் பட்டியல் குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழே சொடுக்கவும்.

தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சுதந்திர தின விருதுகள் தொடர்பான விவரங்கள் தனிச்செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பதிவை காண கீழே சொடுக்கவும்

http://www.dinamalarnellai.com/web/news/75856