கலைமாமணி விருதுகள் பட்டியலில் விஜய் சேதுபதி பெயர் - மேடையில் அறிவிப்பில்லை!

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 12:46

சென்னை,

2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய்சேதுபதியும் தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது வழங்கும் விழாவில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.

இயல், இசை, நாடகம், உள்ளிட்ட கலைத் துறைகளை சேர்ந்த கலைஞர்களுக்கு வருடந்தோறும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம்.

திரைப்படம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு வோருக்கான கலைமாமணி விருதுகள், சென்னை - கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று அளிக்கப்பட்டன. 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் அடங்கிய இந்த விருதுடன், பாரதி, பாலசரஸ்வதி, எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பெயரிலான விருதுகளும் அளிக்கப்பட்டன.

இந்த விழாவில் 200 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய்சேதுபதியும் தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது வழங்கும் விழாவில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. விழாவுக்கு விஜய்சேதுபதி வரவும் இல்லை. பாடலாசிரியர் யுகபாரதியின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அவரும் விழாவுக்கு வரவில்லை.