மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் – தமிழக அரசு வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 12:26

சென்னை,

சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில், பொதுமக்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, மழைக்கு முன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை, அனைத்து வீடுகளிலும் அமைத்தால், வரும் கோடைக் காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, வீடுகள் தோறும் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னையின் தொழில் வளர்ச்சி, விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கம் போன்றவை காரணமாக, நீர் தேவை அதிகரித்து, தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், சென்னையின் பரப்பளவான, 426 சதுர கி.மீ.,யில், மழைநீரை தேக்கி வைக்கும் வசதிகள் குறைவாகவே உள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை, குடிநீர் தேவைக்காக, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களையே நம்பி உள்ளது. இந்த மாவட்டங்களின், 1,116 நீர்நிலைகள் தான், சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்திசெய்கின்றன. இதை தவிர, வீராணம் கூட்டு குடிநீர், கிருஷ்ணா நீர் உள்ளிட்டவற்றால், சென்னையின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், சென்னை மாநகரின் தினசரி குடிநீர் அளவான, 100 கோடி லிட்டர் நீர் தேவையை, முழுமையாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.இதன் காரணமாக, நடப்பாண்டில், கோடை துவங்கும் முன், சென்னை மற்றும் புறநகர்வாசிகள், காலி குடங்களுடன் தண்ணீருக்காக வீதி வீதியாக அலைந்தனர்.

தற்போது வரை, மாநிலம் முழுவதும் பரவலாக தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதற்கு, நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றதும் முக்கிய காரணம் என, தமிழக அரசு கூறுகிறது.

அடுத்த கோடைக் காலத்திலும், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, வீடுகள் தோறும் செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில், புதிதாக, 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, வார்டுக்கு, ஒரு குழு என, 200 குழுக்களை நியமித்துள்ளது. இந்த குழுவினர், வீடுகள் தோறும் ஆய்வு செய்துவருகின்றனர். எந்தெந்த கட்டிடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பதையும், இருக்கும் கட்டடங்களில், செயல்பாட்டில் உள்ளதா என்பதையும் ஆராய்கின்றனர்.

இதுவரை, 2 லட்சத்து, 468 கட்டிடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து  ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்து, 15 ஆயிரத்து, 779 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டடமைப்புகள் உள்ளன.

34 ஆயிரத்து, 538 கட்டிடங்களில், சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 62 ஆயிரத்து, 151 கட்டிடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைப்பது மற்றும் புதிதாக மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த, பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது.குறிப்பாக, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பிற்கான பணத்தை, தாங்களே செலவிட வேண்டும் என்பதால், பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக, ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, அரசு கட்டிடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், உறை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி மேற்கொள்கிறது.அதே வகையில், பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.