500 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 11:46

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு கட்டங்களாக  5,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த இரண்டரை ஆண்டு காலகட்டங்களில், 1,160 கோடி ரூபாய் செலவில், 3,881 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இன்று 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான, 500 புதிய பேருந்துகளை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத்துறைக்கு புதிய பேருந்துகள்

சுற்றுலாத்துறை சார்பில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 43 இருக்கைகள் அடங்கிய நவீன வசதியுடன் கூடிய வால்வோ பேருந்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பேருந்தினுள் ஏறி பேருந்தின் வசதிகளை பார்வையிட்டனர்.

இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள 500 புதிய பேருந்துகளில், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 235 பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 118 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு 147பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் புதிய பேருந்துகள், மத்திய அரசின், அகில இந்திய மோட்டார் வாகன தரக்கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரைப் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநகர பேருந்துகளில், பயணிகள், எளிதாக ஏறி இறங்கும் வகையில், தானியங்கி கதவு அமைப்புடன், அகலமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பேருந்தின் இருபுறமும் அவசரகால வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கைகள், அவர்கள் கொண்டுவரும் ஊன்றுகோலை வைக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், தாங்கள் இறங்கும் இடத்தை ஓட்டுநருக்கு தெரிவித்திட, ஒலி அழைப்பான் அமைக்கப்பட்டுள்ளது.