உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கு: 3 உத்தர பிரதேச போலீசாரின் ஜாமீன் ரத்து

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 21:10

புதுடில்லி,

உன்னாவ் பெண்ணின் தந்தை நீதிமன்ற காவலில் இருக்கும் போது கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 உத்தரபிரதேச காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை டில்லி மாவட்ட நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

உன்னாவை சேர்ந்த இளம் பெண் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணின் தந்தை மீது கடந்த 2018ம் ஆண்டு ஆயுதங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

உன்னாவ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை, அவர் தந்தை மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியது, காவலில் இருந்த போது அவரை கொலை செய்தது ஆகிய வழக்குகளின் விசாரணை உத்தரபிரதேச உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் உன்னாவ் பெண் அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். அவர் கார் மீது லாரி ஒன்று மோதியதில் உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயமடைந்தனர். அவரது இரு உறவினர்களும் உயிரிழந்தனர்.

உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து உட்பட உன்னாவ் பெண் தொடர்பான 4 வழக்குகளை  சிபிஐ விசாரணை செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் டில்லியில் உள்ள டிஸ் அசாரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் இன்று உன்னாவ் வழக்குகள் மீது விசாரணை நடந்தது.

அப்போது உன்னாவ் பெண்ணின் தந்தை மீது பொய் வழக்கு சுமத்தியது மற்றும் அவரை கொலை செய்த வழக்குகளின் கீழ் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் உன்னாவ் பெண்ணின் தந்தை நீதிமன்ற காவலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று உத்தரபிரதேச காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

அவர்கள் மூன்று பேரையும் உடனடியாக கைதுசெய்யும்படி நீதிபதி தர்மேஷ் சர்மா உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றம் மறுப்பு

உன்னாவ் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 20 வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் பி.ஆர். காவாய் அடங்கிய அமர்வு அதை ஏற்க மறுத்துவிட்டது. உன்னாவ் பெண் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதியில் உன்னாவ் வழக்கை வரும் ஆகஸ்ட் 19ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.