கேரளாவில் கனமழை: பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு, 40 பேர் மாயம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 20:44

திருவனந்தபுரம்

   கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 40 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இம்மாத தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள புதுமலை, கவளப்பாறை ஆகிய 2 கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி புதைந்து போனது. இந்த கிராமங்களில் வசித்தவர்களை மீட்கச் சென்ற மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 2 கிராமங்களிலும் சுமார் 80 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களில் இதுவரை 41 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், 40 பேரை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இதில் 808 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 8,459 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அரசு நிவாரண முகாம்களில், இதுவரை சுமார் 80 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது.

மழை நேற்று ஓய்ந்திருந்தாலும் இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.