அயோத்தி வழக்கு: சர்ச்சைக்குரிய நிலத்தில் முன்பு கோவில் இருந்ததா? உச்ச நீதிமன்றத்தில் வாதம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 20:14

புதுடில்லி,

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு விசாரணை இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. விசாரணையின் போது சர்ச்சைக்குரிய நிலத்தில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு ராமர் கோவில் இருந்ததா என்ற கேள்விக்கான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மீண்டும் துவங்கியது. வாரத்தில் 5 நாட்களும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் இன்று 5ம் நாளாக விசாரணை தொடர்ந்தது.
விசாரணையின் போது ராமஜென்ம பூமி என்றழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நிலத்தில் முன்பு கோவில் இருந்ததா என்பது குறித்து வாதாடப்பட்டது.

மனுதாரர்களில் ஒருவரான ராம் லாலா விராஜ்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் சர்ச்சைக்குரிய நிலத்தில் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோவில் இருந்ததாக வாதாடினார்.

அயோத்தியா வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அங்கு கோவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. கோவிலின் சிதிலங்கள் மீது தான் மசூதி கட்டப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ கான் கூறினார் என்று சி.எஸ் வைத்தியநாதன் கூறினார்.

ராம் லாலா விராஜ்மான் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் கே. பராசரன் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முழுமையான நீதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

கடந்த வெள்ளிக்கிழமை 4ம் நாள் விசாரணையின் போது ராமரின் வம்வாளியினர் யாராவது தற்போது உள்ளனரா? என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியது.

அதற்கு ஜெய்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. தியா குமாரி தங்கள் குடும்பத்தினர் ராமரின் மகன் குசாவின் வழிதோன்றல்கள் என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து இன்று மேவார் ராஜ குடும்பத்தினர் தாங்கள் தான் ராமரின் வம்சாவளியினர் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு குடும்பத்தினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.