துர்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸா?: திரிணாமுல் காங்கிரஸ் தர்ணா போராட்டம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019 19:57

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பல துர்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் மேற்குவங்கத்தில் செயல்படும் பல துர்கா பூஜை கமிட்டிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய வரிகளை கட்டும்படி அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆகஸ்ட் 13ம் தேதி திரிணாமுல் காங்கிரஸின் மகளிர் அணி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஞாயிற்றுக்கிழமை மம்தா பானர்ஜி அறிவித்தார்.

துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

இந்த போராட்டத்தில் துர்கா பூஜை கமிட்டி உறுப்பினர்கள், அதில் பங்கேற்பவர்கள் என மேற்குவங்கத்தை நேசிக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மம்தா பானர்ஜியின் இந்த செயலை நேற்று பாஜக கடுமையாக விமர்சித்தது. சில திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சீட்டு கம்பெனி மூலம் கொள்ளையடித்த பணத்தை துர்கா பூஜை கமிட்டி மூலம் முறைகேடு செய்கிறார்கள் என குற்றம்சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதியான இன்று மம்தா பானர்ஜி அறிவித்தபடி இன்று மத்திய கொல்கத்தாவில் அமைந்துள்ள சுபோத் முல்லிக் சதுக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மகளிர் அணியினர் 8 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.